சேலத்தில் பேட்மின்டன் விளையாடிய முதல்வர் பழனிசாமி!

பேட்மின்டன் விளையாடும் முதல்வர் பழனிசாமி

சேலம் மாநகராட்சி சார்பாக, பசுமைவெளிப் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவனும் இறகுப்பந்து விளையாடினார்கள்.

சேலம் மாநகராட்சியில் உள்ள முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் நடைப்பயிற்சி, விளையாட்டு, உடற்பயிற்சி செய்யும் வகையில் தியான மண்டபம், மூலிகைப் பூங்கா, உடற்பயிற்சி மையம், நடைமேடை என சகல வசதிகளோடு சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தர்ம நகர் பசுமைவெளிப் பூங்கா, அபிராமி கார்டன் பசுமைவெளிப் பூங்கா, முல்லை நகர், கிழக்கு மேம்பால நகர் , பிரகாசம் நகர், குறிஞ்சி நகர், பரமன் நகர், கம்பன் தெரு, அய்யாசாமி பார்க் யெல்லீஸ் கார்டன், காந்தி நகர், அபிராமி கார்டன் பசுமைவெளிப் பூங்கா என 12 பசுமைவெளிப் பூங்காக்கள், 5. 63 கோடி செலவில் அமைக்கப்பட்டது. இந்த 12 பசுமைவெளிப் பூங்காக்களையும் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அய்யாசாமி பசுமைவெளிப் பூங்காவில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்து, பூங்காவுக்குள் சென்றார்.

இளங்கோவனுடன் விளையாடும் முதல்வர்

பூங்காவுக்குள் இருந்த டென்னிஸ் மைதானம் பக்கம் சென்றதும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இளங்கோவனைக் கூப்பிட்டு, வா பேட்மின்டன் விளையாடலாம் என்றதும், உற்சாகத்தோடு முதல்வரும் இளங்கோவனும் களம் இறங்கி இறகுப்பந்து விளையாடினார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓடி ஓடி பந்தை எகிறி அடிக்க, பந்தைத் திருப்பி அடிக்க முடியாமல் இளங்கோவன் திணறினார். இதை சேலம் கலெக்டர் ரோஹிணி, மாநகராட்சி ஆணையர் சதீஷ் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் சூழ்ந்துநின்று வேடிக்கை பார்த்தார்கள்.
பிறகு இளங்கோவன், முதல்வர் எடப்பாடியைப் பார்த்து ''நல்லா விளையாடுறீங்கண்ணா'' என்றபோது, ''நீயும்தாப்பா நல்லா விளையாடுறே'' என்றார். சுற்றி வேடிக்கை பார்த்த கட்சிக்காரர்களும் நிர்வாகிகளும், 'ரெண்டு பேரும்  நன்றாக விளையாடுறீங்க' என்று கலாய்க்கும் தொனியில் பேசினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!