வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (31/08/2018)

கடைசி தொடர்பு:16:00 (31/08/2018)

சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் - டி.டி.வி.தினகரன் விருப்பம்

``கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதே எங்களது விருப்பம்'' என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக அமையும் என்றும் அவர் கூறினார். 

சசிகலா குறித்து டி.டிவி.தினகரன் பேட்டி

அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``ஓ.பன்னீர்செல்வம் யார் என்பதைத் தேனி மாவட்ட மக்களிடம் கேட்டால் தெரியவரும். அவரைப் பற்றி தமிழக மக்களும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். ஓ.பி.எஸ் சகோதரர் ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். அவர் தற்போதும் கட்சிப் பதவியில் இருக்கிறார். ஓ.பி.எஸ் மகனும் கட்சிப் பதவியில் இருக்கிறார். அவரின் உறவினர்கள் பலரும் கட்சியில் பொறுப்புகளில் இருக்கிறார்கள். ஓ.பி.எஸ்ஸின் சம்பந்தி அட்வகேட் ஜெனரலாக இருக்கிறார். இப்படி தன் குடும்பத்தினர் எல்லோருக்கும் கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்புகளைக் கொடுத்து வைத்திருக்கும் அவர், 'ஒரு குடும்பத்தின் பின்னணியில் கட்சியில் இருப்பதற்கு நான் எந்த நிலையிலும் அனுமதிக்க மாட்டேன்’ என எங்களைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. 

எங்களுக்கெல்லாம் ஜெயலலிதாதான் பொறுப்புகளைக் கொடுத்து அழகு பார்த்தார்கள். இடையில், ஓ.பி.எஸ் செய்த சில சதிச் செயல்களின் காரணமாக எங்களைச் சில நாள்கள் ஒதுங்கி இருக்குமாறு அம்மா சொன்னார்கள். அம்மா சொன்னதை எல்லாம் கேட்டு நாங்கள் செயல்பட்டோம். ஆனால், ஓ.பி.எஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவருமே ஜெயலலிதா உருவாக்கிய கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள். ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் கேட்டுக் கொண்டதனாலேயே சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இப்போது இருவருமே மாற்றிப் பேசுகிறார்கள். துரோகத்துக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் ஒரு பக்கம் பன்னீர்செல்வமும் மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியும் இருப்பார்கள். சசிகலா விரைவில் விடுதலையாவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை.

கடந்த மாதம் 18-ம் தேதி சசிகலாவைச் சந்தித்தேன். அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. தேர்தல் சமயத்தில் நாங்கள் கூட்டணி அமைப்போம். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தனியாக நிற்பதற்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறோம். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் எங்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும்’’ என்று தெரிவித்தார்.