சாலை விபத்தில் மணமகளின் தந்தை உட்பட 3 பேர் பலி - சீர்வரிசை கொடுத்து திரும்பியபோது நடந்த சோகம்! | Nellai: 3 died in road accident

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (31/08/2018)

கடைசி தொடர்பு:16:45 (31/08/2018)

சாலை விபத்தில் மணமகளின் தந்தை உட்பட 3 பேர் பலி - சீர்வரிசை கொடுத்து திரும்பியபோது நடந்த சோகம்!

நெல்லை மாவட்டத்தில் திருமண வீட்டில் சீர்வரிசை கொடுத்துவிட்டு திரும்பிய வேன் சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி சாலை விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

சாலை விபத்து

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் அவருடைய மகள் ஈஸ்வரிக்குத் திருமணம் முடிந்து மறுவீடு அழைப்புக்காக மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு சிவகளை கிராமத்தில் உள்ள மாப்பிள்ளை வீட்டுக்கு தன் உறவினர்களுடன் சென்றனர். அங்கு மணமகளை விட்டுவிட்டு வேனில் சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். 

அவர்கள் வந்த வாகனத்தை சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் ஓட்டிவந்துள்ளார். அழகியபாண்டிபுரம் அருகே உள்ள சுப்பையாபுரம் பகுதிக்கு வரும்போது வேன் கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்பு சுவரில் வேன் மோதியது. இந்த விபத்தில் டிரைவர் மாடசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். அத்துடன் மணமகளின் தந்தை முருகன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் செந்தில்முருகன், ஆறுமுகம், லெட்சுமி அம்மாள் மற்றும் 4 வயது சிறுமியான இளவரசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக மானூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து மணமகளின் வீட்டில் மணப்பெண்ணை விட்டுத் திரும்பியபோது மணமகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் மணவீட்டாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.