முல்லைப் பெரியாறில் 142 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்பக் கூடாது என்று வதந்தி பரப்புகிறார்கள் - முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி

``முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்பக் கூடாது என்று வதந்தி பரப்புகிறார்கள்'' என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கத்தில் சாலை பாதுகாப்பு ரோந்து  குழுக்களாக செயல்படும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கினார். நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ``பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி அம்மா அரசு சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அறிவித்ததைப்போல மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்களுக்கு வரும் 2019 ஜனவரி முதல் தேதியில் இருந்து தடை விதிக்கப்படும். இதற்கான தொடக்க விழாவை ஏற்கெனவே சென்னையில் நடத்திவிட்டோம். அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக எல்லா மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் நடத்தி வருகிறார்கள்.

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக இங்குள்ள கண்காட்சியில் மாற்றுப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. அதை உற்பத்தி செய்வதற்கு அரசு தாராளமாக உதவிகள் செய்யும். எதிர்க்கட்சிகள் அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக அரசு மீது குறை சொல்லி வருகிறார்கள். அனைத்துத்துறை கோப்புகளையும் விரைவாகப் பார்த்துக் கையெழுத்துப் போட்டு வருகிறேன். அனைத்துத் துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயத்துறைக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி இருக்கிறது. அதையடுத்து போக்குவரத்துத்துறை, மருத்துவத்துறை அனைத்தும் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நீதிமன்றம் 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக்கொள்ள ஆணையிட்டுள்ளது. கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பிறகு ஒரு வாரம் கழித்து அணை நிரம்பிய பிறகு தண்டூரா போட்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி அணையை திறந்து விட்டோம். அணையில் 142 மேல் தண்ணீர் நிரப்பக் கூடாது என்று வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அது வாக்குச்சீட்டு முறை என்றாலும் சரி, மின்னணு வாக்கு முறை என்றாலும் சரி. எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!