மறைந்தார் பேரூர் சாந்தலிங்க அடிகளார்!

பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார்

பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க இராமசாமி அடிகளார் உடல் நலக்குறைபாடு காரணமாக இன்று உயிரிழந்தார். ஆதீன முறைப்படி இறுதிச் சடங்குகள் முடித்து அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள முதலிபாளையம் பகுதியில் சிவராமசாமி அடிகளார் - கற்பினி அம்மையார் தம்பதிக்கு மகனாக கடந்த 1925-ம் ஆண்டு பிறந்தவர் பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க இராமசாமி. தன்னுடைய 15-வது வயதில் திருமடப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட, சாந்தலிங்க இராமசாமி திருப்பணிகளோடு நின்றுவிடவில்லை. இளைய பட்டமாக இருந்தபோது பேரூர் பகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக தமிழ் பள்ளியைத் தொடங்கினார். கொங்குநாட்டுக்கு தமிழ்க் கல்லூரி வேண்டுமென்பதற்காக தமிழ்கல்லூரியையும் பேரூருக்குக் கொண்டுவந்தார். 

மயிலம் கல்லூரியில் தனித்தமிழ் கல்வி பயின்றுள்ள ராமசாமி அடிகளார், 1952-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும் பெற்றிருக்கிறார். 1967-ம் ஆண்டு முதல் பேரூர் ஆதீன மடாதிபதியாக உள்ள இவர், தமிழ் மீது அதிகம் பற்றுடையவர். ஆகையால் பிள்ளையார் வேள்வி, திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு முதலிய அருளியல் நிகழ்வுகள், புதுமனைப் புகுவிழா, திருமணம் மற்றும் மணிவிழா உள்ளிட்ட வாழ்வியல் நிகழ்வுகளை தமிழ் வழியில் நடத்துவதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திப் போராடினார்.

கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நிலை குறைபாடு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று நண்பகலில் உயிரிழந்தார். பேரூர் ஆதீனத்தில் வைக்கப்பட்டுள்ள இவரது உடல், ஆதீனம் முறைப்படி இன்று மாலை இறுதிச் சடங்குகள் முடிந்து அடக்கம் செய்யப்பட உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!