வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (31/08/2018)

கடைசி தொடர்பு:17:45 (31/08/2018)

`சிமென்ட் ஆலையால் வாழ்வாதாரமே அழிந்துவிட்டது` - கருத்துக்கேட்டு கூட்டத்தில் பொங்கிய மக்கள்

``சிமென்ட் ஆலைகளால் எங்களது வாழ்வாதாரமே அழிந்துவிட்டது. மீண்டும் செட்டிநாடு சிமென்ட் ஆலைச் சுரங்கப் பணிக்கு அனுமதி வழங்கக் கூடாது. மீறியும் அனுமதி வழங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" எனக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

                                      

அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில் சுண்ணாம்பு சுரங்கம் அமைப்பதற்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பொதுமக்கள், "மாவட்டத்திலுள்ள எந்த சிமென்ட் ஆலையும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கூறிய எந்த முறைகளையும் பின்பற்றுவதில்லை. அரசின் விதிப்படி எந்த முடிவற்ற சுரங்கங்களையும் ஆலை நிர்வாகம் மூடுவதில்லை. இதனால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் படிப்படியாகச் சிமென்ட் ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரங்கம் குறித்து அரசின் விதிகளை ஆலை நிர்வாகம் கடைப்பிடிப்பதில்லை. எந்தத் தனியார் சிமென்ட் ஆலையும் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதி கொடுப்பதோடு வேலை வழங்குவதில்லை. எனவே, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்ற ஆலையின் முடிவை மாவட்ட ஆட்சியர் முன் உறுதி தர வேண்டும்.

                                       

பெரும் முதலாளிகள் பிழைக்கவே இவ்வாறான திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்குகிறது. சுரங்கப்பணியால் நீர், நிலம், காற்று, ஒளி மாசடைகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. சிமென்ட் ஆலைகளால் எங்களது வாழ்வாதாரமே அழிந்துவிட்டது. மீண்டும் செட்டிநாடு சிமென்ட் ஆலை சுரங்கப் பணிக்கு அனுமதி வழங்கக் கூடாது. மீறியும் அனுமதி வழங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, தனியார் ஆலையின் சுரங்க விரிவாக்கப் பணிக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக் கூடாது" எனக் கொந்தளித்தனர்.