வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (31/08/2018)

கடைசி தொடர்பு:19:00 (31/08/2018)

`ரவிக்குமாருக்குப் பாதுகாப்புக் கொடுங்கள்!' - முதல்வருக்கு 'சி.பி.எம்' பாலகிருஷ்ணன் கடிதம்

கே.பாலகிருஷ்ணன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

ரவிக்குமார்கர்நாடாகாவைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். 'அவரைக் கொலை செய்ததில் இந்துத்துவ அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளது' எனக் கூறப்படுகிறது. இந்தக் கொலை வழக்கில் இதுவரையில் 9 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமாரையும் கொலை செய்வதற்குத் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரவிக்குமாரை பாதுகாப்பாக இருக்கும்படி உளவுத்துறை அறிவுறுத்தியது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், 'நாடு முழுவதும் மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சியினர் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அச்சுறுத்தலுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது தமிழக அரசின் அவசர கடமையாகும். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் தடுத்து, ரவிக்குமாருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.