`அழகிரியை சேர்த்துக்கொண்டால் தி.மு.க வலிமை பெறும்'- நாஞ்சில் சம்பத் | Nanjil sambath supports Alagiri over DMK issue

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (31/08/2018)

கடைசி தொடர்பு:18:40 (31/08/2018)

`அழகிரியை சேர்த்துக்கொண்டால் தி.மு.க வலிமை பெறும்'- நாஞ்சில் சம்பத்

தி.மு.க-வின் தேவை தமிழகத்துக்கு அதிகமாகியுள்ளது என திருவாரூரில் நாஞ்சில் சம்பத் பேட்டியளித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத்

திருமண விழா ஒன்றில் பங்கேற்க வந்த நாஞ்சில் சம்பத், திருவாரூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, `நீங்கள் அ.தி.மு.கவிலும் ம.தி.மு.கவிலும் இருந்தபோது தி.மு.கவைப் பற்றி அதிகமான விமர்சனங்களை முன் வைத்துள்ளீர்கள். ஆனால், தற்போது தி.மு.க தலைவராக பொறுபேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த நாஞ்சில் சம்பத், ``தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க-வின் தேவை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கலைஞரின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், `வட்டமிடும் கழுகாய், வாய்பிளந்த ஓணானாய், வளைத்துவிட நினைக்கும் மலைப்பாம்பாய் வகுப்புவாத கட்சிகள் கனவு காண்கின்ற நேரத்தில் ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுள்ளார். வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்ளும் மதச்சார்பின்மை இருகின்ற  இயக்கத்துக்கு உயிர்ப்பிக்கக்கூடிய சக்கி தி.மு.க-வுக்கு உண்டு என நான் நம்புகிறேன். அந்த அடிப்படையில், தற்போது ஸ்டாலின் தி.மு.க-வின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஸ்டாலினை சந்திக்கச் சென்றேனே தவிர, தி.மு.கவில் இணைகின்ற திட்டமில்லை. நான் இனி கட்சி அரசியலில் ஈடுபட மாட்டேன். அதை நான் விரும்பவில்லை. திராவிட இயக்கத்தின் தத்துவ அரசியலை என் உயிர் உள்ள வரையில் பிரசாரம் செய்ய உள்ளேன். தி.மு.கவை வைகோ ஆதரிப்பது சித்தாந்தரீதியாக சிந்திப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியாது” எனக் கூறினார்.

அழகிரி குறித்து பேசிய நாஞ்சில் சம்பத், ``அழகிரி தென்னகத்தின் அமைப்புச் செயலாளர், முன்னாள் மத்திய மந்திரி, அனைவரையும் பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு வல்லமை கொண்டவர். அவரே, தன்னை தி.மு.க-வில் இணைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறும்போது அவரிடத்தில் வேறு ஏதும் அரசியல் உள்ளதுபோல் எனக்குத் தெரியவில்லை. அதற்கு மேல் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. பந்து, ஸ்டாலின் மைதானத்தில் உள்ளது. அவர்தான் முடிவு செய்ய வேண்டும் அழகிரியை ஏற்றுக்கொண்டால் தி.மு.க வலிமைபெறும். அரசியலில் எண்ணிக்கைதான் முக்கியம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்  ``இன்றைய சூழ்நிலையில் தேர்தல் வந்தால் தி.மு.க வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நிறுத்தப்படுகின்ற வேட்பாளரைப் பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். அ.தி.மு.க-வில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்பதை சமீபத்தில் மதுசூதனன் நடவடிக்கைகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது” என்று கூறி முடித்தார்.