எட்டு வழிச்சாலைக்காக வீழ்த்தப்பட்டதா 128 மரங்கள்? - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

வெட்டப்பட்ட மரங்கள்

சேலம் - தருமபுரி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சின்ன கல்வராயன் மலைப்பகுதியில்  8 வழி பசுமைச் சாலைக்காகப் போடப்பட்டுள்ள முட்டுக் கல்களுக்கு அருகில் 128 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. இது சேலம் டு சென்னை 8 வழிச் சாலைக்காக வெட்டப்பட்ட மரங்கள் என்றுகூறி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மரங்கள் வெட்டப்பட்டு கிடந்த சின்ன கல்வராயன் கோம்பூர் மலைப்பகுதிக்கு இயற்கை ஆர்வலர்கள் கூடியதால் வருவாய்த்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தார்கள்.

வெட்டப்பட்ட மரங்கள்

இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் கூறுகையில், ''இந்த மரங்கள் ஒரு நாளில் வெட்டப்பட்ட மரங்கள் அல்ல. ரெண்டு மூன்று நாள்கள் இரவு நேரத்தில் வெட்டி இருக்கிறார்கள். நேற்று மதியம் 2.00 மணிக்கு ஆடு மெய்த்துக்கொண்டிருக்கும்போது மரங்கள் லோடு ஏற்றிக்கொண்டிருந்தார்கள். உடனே கிராம நிர்வாக அதிகாரி, ஆர்.ஐ, தாசில்தார் அனைவருக்கும் போன் பண்ணினேன். யாரும் வரவில்லை.

அதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்தேன். பிறகு 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தெரிந்து, அவர்கள் இங்கு வந்தார்கள். இங்கு வேம்பு, மலைவேம்பு, தகர மரம், பரம்பை, கருவேலமரம் என விலை உயர்ந்த வைரம் பாய்ந்த மரங்களை வெட்டி இருக்கிறார்கள். இரவு நேரத்தில் மரத்தை வெட்டும்போது மரத்தின் மேல் இருந்த 10-க்கும் மேற்பட்ட குரங்குகளும் இறந்ததாக அருகில் உள்ள விவசாயி கணேசன் தெரிவித்தார். பசுமைச் சாலைக்காகவே மரங்களை வெட்டி இருக்கிறார்கள்.''

இதுபற்றி வட்டாட்சியர் கற்பகவடிவுவிடம் விளக்கம் கேட்டோம். அவர் கூறுகையில், ''நாங்கள் வேறு ஒரு சர்வே எண்ணில் உள்ள காய்ந்த மரத்தை வெட்டுவதற்கு பெர்மிஷன் கொடுத்தோம். ஆனால், இங்கு பச்சை மரத்தை வெட்டி இருக்கிறார்கள். யார் வெட்டியது என்று தெரியவில்லை. அதுபற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 8 வழிச்சாலைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை'' என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!