`உழைக்கும் மக்களுக்கு வழிவிடுங்கள், வாழ விடுங்கள்!’ - அரசை அசைக்கும் மக்களின் மனிதச் சங்கிலி

மண்ணின் மைந்தர்கள்தான் இந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அதுவும் மக்கள் வாழ்வதற்கு எந்தவித தகுதியும் இல்லாத இடங்களுக்குக் கட்டாய இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

`உழைக்கும் மக்களுக்கு வழிவிடுங்கள், வாழ விடுங்கள்!’ - அரசை அசைக்கும் மக்களின் மனிதச் சங்கிலி

சென்னை மாநகர வளர்ச்சிக்காக உழைப்பவர்களின் தொழில் உரிமை, நில உரிமை, கல்வி உரிமை, குடியிருப்பு உரிமை வழங்கக் கோரி அரங்கக் கூட்டமும் அதைத்தொடர்ந்து மனிதச் சங்கிலி போராட்டமும் சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்றது. 

சென்னை மாநகரில் அதிகமாகக் கவனிக்கப்படாத ஆனால், கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான பிரச்னை கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் பகுதி மற்றும் இதர பகுதிகளில் வாழும் மக்களைச் சென்னையிலிருந்து வெளி இடங்களுக்கு இடமாற்றம் செய்வதுதான். இதைக் கண்டித்து பல மாதங்களாகப் பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட குடிசைவாழ் பகுதி மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதனை நவீன தீண்டாமையாகப் பார்க்கும் சமூக ஆர்வலர்களும் மக்களும் அரங்ககூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் குடியிருப்போர் சங்கம், குடிசை வாழ்வோர் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு, பெண்ணுரிமை இயக்கம், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு உட்பட பல இயக்கங்களும் பல பகுதி மக்களும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டவர்கள் என்ன பேசினார்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

மனித சங்கிலி

ஒவ்வொரு பகுதியிலுள்ள மக்களின் பிரதிநிதிகள் பேசியதாவது…

செபாஸ்டின் (வியாசர்பாடி):

செபாஸ்டின்

கண்ணகிநகர், பெரும்பாக்கம் வருவதற்கு முன்னாடி சென்னையிலிருந்த மிகப்பெரிய குடிசை மாற்றுவாரியம் இருந்த பகுதி வியாசர்பாடி. சென்னை பாரீஸ் தெருக்களை முன்னேற்றுவதாகக் கூறி அங்கிருந்து மக்களை வியாசர்பாடிக்கு அழைத்துவந்தனர். ஆனால், இன்று வரை அவர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் கிடையாது. மக்களை இரண்டடுக்கு, மூன்றடுக்கு மாடிகளில் அமர்த்துவதோடு சரி. பின்பு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தருவது கிடையாது. வீடுகளையே சரியாகப் பரிமரிக்காத அரசு 8 அடுக்கு, 13 அடுக்கு கட்டடத்தை எப்படிப் பராமரிக்கும். அரசு சொல்கிறது, “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று. இன்று குடிசை மாற்றுவாரியம் எல்லா ஏழைகளையும் அழதான் வைக்கிறது. வீட்டை இடிச்சு கட்டும்போதுகூட எந்த அனுமதியும் கேட்பதில்லை. எங்கள கூப்பிட்டு இதுவரைக்கும் ஒருநாள்கூட பேசல. எந்த அடிப்படை உரிமையும் இந்த மக்களுக்கு இல்லை என்று அரசு மறைமுகமாகச் சொல்கிறது. எட்டு மாதகாலமாகப் போராடி வருகிறோம். எந்தவிதமான பதிலும் இல்லை. வீட்டை இடித்து மாற்றுவீடுகள் கட்டித்தரும் போது தற்காலிகக் குடியிருப்புகள் தர வேண்டும். அந்தக் குடியிருப்பை சுடுகாட்டுல தராங்க. பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத இடங்கள்ல தராங்க. புது அடுக்குமாடி வீடு வேணாம், லிஃப்ட் வேணாம், எங்களுக்குப் பராமரிப்புக் கட்டணம் எல்லாம் கட்ட முடியாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. 

மணி (நாவலூர்):

மணி

நாவலூர் கதை ஒரு பெருங்கதை. ஏகப்பட்ட பிரச்னைகள் இங்க இருக்கு. பாலியல் கொடுமைகள், கல்விப் பிரச்னை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சென்னை மெட்ரோ சிட்டி ஆயிடுச்சு. ஆனால், இதற்கு முக்கியமான காரணம் உழைக்கும் மக்கள்தான். அந்த உழைக்கும் மக்களுக்குதான் இந்த நிலைமை. ஓட்டு கேட்டு வரும்போது எம்.கே.மோகன் எம்.எல்.ஏ பட்டா வங்கி தர்றேன்னு சொல்லி வாக்குறுதி தந்தாரு. பெருவாரியான வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சாரு. இப்போ போய் கேட்டா என்ன ஜெயிக்க வச்சிங்க, என்னோட கட்சிய ஜெயிக்க வைக்கலயேனு சொல்றாரு. பேருந்து வசதி முதல் சாப்பாடு வரைக்கும் இன்னிக்கு ஒவ்வொரு நாளும் கஷ்டப்படுறோம். உழைக்கும் மக்கள்தான நாடு. எங்கள எடுத்துட்டா வெறும் கல்லும் மண்ணும்தான்.

சிவகாமி (அயனாவரம் நடைபாதை மக்கள்):

அயனாவரத்துலதான் மூணு தலைமுறையாக டிப்போ ஓரத்துல நாங்க இருக்குறோம். கட்டட வேலைதான் செய்றோம். பாத்ரூம் எல்லாம் இடிச்சு தள்ளிட்டாங்க, குளிக்கக்கூட வசதி இல்லை. அரசாங்கத்துல ஒரு பட்டா இடம் மட்டும்தான் கேக்குறோம். ஓட்டுப் போட்றதுக்கு ஐ.டி-யெல்லாம் குடுத்துருக்காங்க, வேற எந்த அடிப்படை வசதியும் அரசு செய்து தரல. வர்றவங்க போறவங்க எல்லாம் பார்த்து சிரிச்சிட்டு போறாங்க, சொல்றதுக்குக்கூட கூச்சமா இருக்கு. பசங்கயெல்லாம் ரோட்டுலதான் படுக்குறாங்க. கொஞ்ச நாள் முன்னாடிகூட ஒரு குழந்தை மேல பஸ் ஏறி இறந்துபோச்சு. இதுதான் நிலைமை. நடைபாதைல இருக்குறவங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் கிடையாது. உபரி நிலம் அரசு கையகப்படுத்தி இருக்குறது மட்டும் 12 சதுர கி.மீ. போலீஸ் வீடு, தாசில்தார் ஆபீஸ்கெல்லாம் குடுக்குறாங்க.

அன்னகிளி (சத்யாநகர்):

சுமார் 60 வருடமா நாங்க இங்கதான் வாழ்ந்துட்டு இருக்கோம். நான்கு பக்கமும் சுவரால கட்டப்பட்டு கூண்டுக்குள்ள இருக்குற மாதிரி இருக்குறோம். முன்னாடி, ஓலை வீடா இருந்துச்சு. தீப்பிடிச்சு எரிஞ்சாகூட ஓட முடியாது அப்படி இருந்தோம். அப்புறம் நாங்களே ஓட்டுபோட்டு வீடுகள கட்டிக்கிட்டோம். அடிப்படையான வசதிகள்தான் இங்க இல்ல. இருந்தாலும், ஹாஸ்பிடல், ஸ்கூல் எல்லாமே பக்கத்துல இருக்கு. கண்ணகி நகர், துரைப்பாக்கம் கதையெல்லாம் மக்கள் சொல்றாங்க, நாங்க போக விரும்பல. எங்க ஊர்ல செண்டம் எடுக்குற பிள்ளைங்கல்லாம்கூட இருக்காங்க. அவங்களோட படிப்பையெல்லாம் வேஸ்ட் ஆக்க முடியாது. நாங்க இங்கதான் இருப்போம். எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுங்க. வழி விடுங்க, வாழவிடுங்க.

தேவநேயன் (தோழமை அமைப்பு):

தேவநேயன்

மண்ணின் மைந்தர்கள்தான் இந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அதுவும் மக்கள் வாழ்வதற்கு எந்தவித தகுதியும் இல்லாத இடங்களுக்குக் கட்டாய இடமாற்றம் செய்யப்படுகின்றனர். செம்மஞ்சேரியில் கொடுக்கப்பட்ட வீடுகளின் அளவு 155  சதுரஅடி, கண்ணகி நகரில் கொடுக்கப்பட்ட வீடுகளின் அளவு 118  சதுரஅடி. ஒரு மாட்டுக்குகூட சராசரியாக 320 சதுரஅடி தேவை. இதிலிருந்தே அரசின் நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ள முடியும். இதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நாம் நமது நிலப்பிரச்னையை அரசியல் மயமாக்க வேண்டும். இன்று வரைக்கும் அவர் குடியிருக்கும் வீடுகளின் நிலம் அவர்களுக்குச் சொந்தமில்லை என்றுதான் அரசு சொல்கிறது. நவீன தீண்டாமைதான் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்ல குடிசைமாற்று வாரியத்தில் குடிசையிலிருந்து ஒரு பிரதிநிதிகூட கிடையாது, பிறகு வாரியம் எப்படிச் சரியாகச் செயல்படும். குடிசைமாற்று வாரியத்துக்கான எந்தச் சட்டத்தையும் அந்த வாரியம் கடைப்பிடிப்பது இல்லை. சரியாக நாம் போராடினால்தான் இதற்கான தீர்வு கிடைக்கும்.

தேவதாஸ் (நரிக்குறவர்கள் சங்கம்):

தேவதாஸ்

சென்னை மாநகரம் இன்று மிகவும் அழகாகவும் மிகப்பெரிய கட்டடங்களுடனும் இருக்கக் காரணமான மக்களுக்கு பத்துக்குப் பத்து அடி இடம்கூட இல்லை. இதுநாள் வரைக்கும் நாடோடி மக்களுக்குச் சிறிய இடம்கூட கொடுக்கவில்லை. ஆண்கள்கூட எப்படியாவது வாழ்ந்துருவாங்க. கழிவறைக்கும் குளிக்கவும் பெண்கள் அவ்வளவு கஷ்டப்படுகின்றனர். அப்புறப்படுத்துவதில் குறியாக இருக்கும் அரசு, அவர்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தக் கூட்டம் அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கூட்டமாக இருக்க வேண்டும்.

இறுதியில் குடிசை மக்களை அகற்றி தொலைதூரம் கொண்டு செல்லும் நவீன தீண்டாமையைக் கைவிட வேண்டும். குடியிருப்போர் ஒப்புதலின்றி வீடுகளை இடித்தல், விற்பனை செய்யக் கூடாது. அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். வீடற்ற மக்களுக்கு வீட்டுவசதி செய்து தர வேண்டும். நடைபாதை மக்களுக்குத் தங்குமிடம் செய்து தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விருந்தினர் மாளிகை முன்பு மனிதச் சங்கிலி போராட்டத்தையும் மக்கள் நடத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!