``சட்ட மன்றத்திலோ மக்கள் மன்றத்திலோ என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?'' - எஸ்.பி.வேலுமணி சவால்!

''உள்ளாட்சித் துறையில் நிகழ்த்தியுள்ள அரும்பெரும் சாதனைகள்குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விரும்பினால், மக்கள் மன்றத்தில் தனி மேடை அமைத்தோ அல்லது சட்டமன்றத்திலோ விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா?'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலுமணி

இதுகுறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,``தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளற்ற புலம்பல்களுடன், நெறியற்ற அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். அவர் நேற்று வெளியிட்ட, ஸ்மார்ட் சிட்டி என்ற சீர்மிகு நகரம் பற்றிய அறிக்கை, அதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சீர்மிகு நகரங்கள் அமைக்கும் பணிகளில் மாதங்கள் பல ஆகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மு.க.ஸ்டாலின் வழிமொழிந்திருக்கிறார். இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்து அவர் சிறிதும் அறிந்திருக்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. கடந்த ஓராண்டில், தமிழகத்தில் உள்ள அனைத்து 11 சீர்மிகு நகரத் திட்டங்களிலும், இத்திட்டப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் உள்ளன. இந்திய அளவில் முதல் 20 இடங்களில் தமிழ்நாட்டின் சீர்மிகு நகரங்கள் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளதே இதற்குச் சான்றாகும். சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு 33 திட்டங்கள் எடுக்கப்பட்டு, 20 பணிகள் ரூ.310 கோடியில் முடிக்கப்பட்டும், நடைபெற்றும் வருகின்றன. 12 பல்வேறு திட்டங்கள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பணி தொடங்கும் நிலையில் உள்ளன.

இவற்றில், நவீன முறையில் நகரம் முழுமைக்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டம்குறித்துதான் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், சென்னை மாநகரில் அமைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியால் திறந்தவெளி மின்னணு ஒப்பந்தப்புள்ளி 22.2.2018 அன்று கோரப்பட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கடைசி நாளாக 28.3.2018 அன்று நிர்ணயிக்கப்பட்டது.  தொழில்நுட்பத் தகுதிபெற்ற மூன்று நிறுவனங்களான எல் அண்டு டி நிறுவனம், மெட்ராஸ் செக்யூரிடி பிரின்டர்ஸ் நிறுவனம் மற்றும் கெல்ட்ரான் நிறுவனங்களுக்கு அழைப்புகள் கொடுக்கப்பட்டு, 4.6.2018 அன்று இந்நிறுவனங்களின் தொழில்நுட்ப அம்சங்களைத் தொழில் நுட்பக்குழு மதிப்பீடு செய்தது. அதன் பின்னரே விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டன. குறைந்த ஒப்பந்தப்புள்ளி விலைவிகிதம் அளித்த ஒப்பந்ததாரரான கெல்ட்ரான் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

சென்னை தவிர பிற மாநகராட்சிகளில் உள்ள 10 சீர்மிகு நகரங்களில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தும் ஒப்பந்தப்புள்ளி எல் அண்டு டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கெல்ட்ரான் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதில், 3.9.2018 வரை இருக்கின்ற நிலையே நீடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விசாரணை நிலுவையில் உள்ள வழக்கு பற்றி அறிக்கை விடுவது, நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என்பதை அறியாத மு.க.ஸ்டாலினின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனமானதாகும். ஒளிவு மறைவற்ற மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறையில் தேர்வு செய்யப்பட்ட, கேரள மாநில அரசு சார்ந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் நிறுவனத்துக்கும், எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத நிலையில், அதை பினாமி நிறுவனமென  குற்றம் சாட்டியிருப்பது மிகுந்த உள்நோக்கம் கொண்டதாகும்.

மு.க.ஸ்டாலினின் குடும்ப உறவினர்கள் உள்ளடக்கிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவரின் பினாமி நிறுவனங்கள் என்று குற்றம் சுமத்தினால் ஏற்றுக்கொள்ளத் தயாரா? உள்ளாட்சித் துறையில் நிகழ்த்தியுள்ள அரும்பெரும் சாதனைகள் குறித்து மக்கள் மன்றத்தில் தனி மேடை அமைத்தோ அல்லது சட்டமன்றத்திலோ விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!