வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (01/09/2018)

கடைசி தொடர்பு:11:28 (01/09/2018)

"புகைப்படக் கலைஞரை தாக்கியவர்களைக் கைதுசெய்ய வேண்டும்" -எஸ்.பி-யிடம் பத்திரிகையாளர்கள் மனு!

புகைப்படக் கலைஞரை தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் பத்திரிகையாளர்கள், மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாத்திடம் மனு அளித்தனர்.

பத்திரிகையாளர்கள் மனு

கன்னியாகுமரி பகுதியில் தினகரன் பத்திரிகை புகைப்படக் கலைஞராக இருப்பவர், சுதன்மணி. கன்னியாகுமரியில் சூரியன் அஸ்தமிக்கும் பகுதியில் ஒரு சொரூபம் உடைக்கப்பட்டது சம்பந்தமாக சுதன்மணி மற்றும் வேறு சில பத்திரிகையாளர்கள், கடந்த 27-ம் தேதி செய்தி மற்றும் புகைப்படம் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த 20-க்கும் மேற்பட்டவர்கள், புகைப்படக் கலைஞர் சுதன்மணி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவரது மொபைல் போனை பிடுங்கி உடைத்துள்ளனர். அங்கிருந்து தப்பி வந்த சுதன்மணி, கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கோவளத்தைச் சேர்ந்த சேவியர், ததேயூஸ், சோபியா, ரிமோஸ் மற்றும்  20 பேர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், புகைப்படக் கலைஞரைத் தாக்கியவர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் பிரஸ் கிளப் தலைவர் மதன் மற்றும் செயலாளர் மணிகண்டன் தலைமையில் பத்திரிகையாளர்கள் எஸ்.பி., ஸ்ரீநாத்திடம் மனு அளித்தனர்.