வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (01/09/2018)

கடைசி தொடர்பு:12:38 (01/09/2018)

அம்மாவுக்காக கொலைசெய்த மகன் -  இளம் பெண்ணுக்கு 20 இடங்களில் கத்திக்குத்து! 

கொலை

சென்னையில், அம்மாவிடம் தகராறுசெய்த பக்கத்துவீட்டு இளம்பெண்ணை 20 இடங்களில் கத்தியால் குத்திக் கொலைசெய்த  சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பரிமளா

சென்னை ஓட்டேரி, நம்மாள்வார்பேட்டையைச் சேர்ந்தவர் பரிமளா. இவரின் கணவர் கோவிந்தராஜ். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். பரிமளாவுக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவர், மயிலாப்பூரில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவருகிறார். இந்த நிலையில், பரிமளா மட்டும் வீட்டில் இருந்தார். பரிமளாவின் வீட்டு மாடியில், பாக்யலட்சுமி என்பவர் குடும்பத்துடன் குடியிருந்துவருகிறார். பாக்யலட்சுமிக்கும் பரிமளாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. சில நாள்களுக்கு முன்புகூட இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட,  அதுகுறித்து தன் மகன் சூர்யாவிடம் கூறியுள்ளார் பாக்யலட்சுமி. இதனால், அவர் ஆத்திரமடைந்துள்ளார்.

நேற்று இரவு 10 மணியளவில், பரிமளா வீட்டுக்கு சூர்யா சென்றுள்ளார். அங்கு அவரிடம், என் அம்மாவிடம் நீங்கள் ஏன் அடிக்கடி தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து பரிமளாவின் உடலில் 20 இடங்களில் குத்தினார். பரிமளாவின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் அங்கு  வந்து பார்த்தபோது, ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். ரத்தக்கறை படிந்த கத்தியோடு நின்ற சூர்யாவைப் பிடித்து, தலைமைச் செயலகக் காலனி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம்குறித்து உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் விசாரித்துவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சூர்யா, பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அயனாவரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலைபார்க்கிறார். பாக்யலட்சுமிக்கும் பரிமளாவுக்கும் இடையே நடந்த தகராறு காரணமாகத்தான் சூர்யா இந்தக் கொலையைச் செய்துள்ளார். தொடர்ந்து விசாரித்துவருகிறோம். சூர்யாவைக் கைதுசெய்து, அவரிடமிருந்த கத்தியையும் பறிமுதல்செய்துள்ளோம்" என்றனர். 

போலீஸார் இவ்வாறு சொல்ல, பரிமளா கொலைக்கு  இன்னொரு காரணம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதை போலீஸார் மறுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ``பரிமளாவுக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதையறிந்த சூர்யா, பரிமளா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது நடந்த தகராறில்தான் இந்தக் கொலை நடந்துள்ளது" என்கின்றனர்.