வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (01/09/2018)

கடைசி தொடர்பு:18:16 (01/09/2018)

மூச்சுத் திணறல்; விடுப்பில் மருத்துவர்! - விஜயகாந்த் உடல்நிலை அப்டேட்

நேற்று காலை கட்சி அலுவலகம் வந்துவிட்டு, வீட்டுக்குச் சென்றார். அங்கு கடுமையான மனஉளைச்சலில் இருந்திருக்கிறார் விஜயகாந்த்.

மூச்சுத் திணறல்; விடுப்பில் மருத்துவர்! - விஜயகாந்த் உடல்நிலை அப்டேட்

தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 'அமெரிக்காவில் இருந்து வந்ததும் வழக்கமான மருத்துவ உதவிகள் அவருக்கு வழங்கப்பட்டு வந்தன. நேற்று கடுமையான மூச்சுத் திணறலுக்கு ஆளாகியதால்தான், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் விஜயகாந்த்' என்கின்றனர் தே.மு.தி.க வட்டாரத்தில். 

சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதும், உடனடியாக அறிக்கை வெளியிட்டது தே.மு.தி.க தலைமை அலுவலகம். அதில், 'விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்’ என இரண்டே வரிகளில் விளக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாகப் பேசிய அவரது மைத்துனர் சுதீஷ், 'வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பரிசோதனை முடிந்ததும் நாளை காலை வீடு திரும்புவார்' எனக் குறிப்பிட்டிருந்தார். 

விஜயகாந்த் உடல்நிலை குறித்து தே.மு.தி.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் நடப்பதற்கே மிகவும் சிரமப்பட்டுத்தான் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தார். இதன்பிறகு வழங்கப்பட்ட சிகிச்சையின் பயனாக, கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த அவரது பிறந்தநாள் விழாவில் உற்சாகமாகக் கலந்து கொண்டார். அதன் பிறகு கட்சியின் தலைமைக் கழகத்துக்கு வராமலேயே இருந்தார். நேற்று காலை கட்சி அலுவலகம் வந்துவிட்டு, வீட்டுக்குச் சென்றார். அங்கு கடுமையான மனஉளைச்சலில் இருந்திருக்கிறார் விஜயகாந்த். அரசியல் சூழல்கள் குறித்தும் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். இதன்பிறகு 4.30 மணியளவில் அவரது உடல்நிலையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது.

பிரேமலதாஇதனால் அதிர்ச்சியடைந்த பிரேமலதா, குடும்ப மருத்துவரை அழைத்திருக்கிறார். அவர் விடுப்பில் இருப்பதாகச் சொல்லப்படவே, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டதன் பயனாக குணமடைந்துவிட்டார். இன்று காலை அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவிக்கிறது. சர்க்கரை குறைபாட்டுக்கும் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அவருக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல் வருவதால், வீட்டுக்குள்ளேயே ஸ்பெஷல் ஆக்ஸிஜன் கொடுக்கக் கூடிய வசதிகளை செய்து வைத்துள்ளனர். இருப்பினும், நேற்றைய சூழலை குடும்பத்தினர் யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருக்கிறார். விரைவில் நலம் பெற்றுத் திரும்புவார்" என்றார் விரிவாக. 

"அமெரிக்காவில் நாற்பது நாள்கள் சிகிச்சையில் இருந்தும், சொல்லிக் கொள்ளும்படியான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. சென்னை திரும்பியதும், வழக்கம்போல சிகிச்சை எடுக்கச் செல்லும் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். சர்க்கரை குறைபாடு இருப்பதால், 15 நாள்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு வந்து சென்றவர், தற்போது வாரம் ஒருமுறை சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். தைராய்டு உள்பட பல்வேறு கோளாறுகளும் சேர்ந்து கொண்டன. 'தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ததன் விளைவாகத்தான் இப்படியெல்லாம் நடக்கிறது' எனக் குடும்ப உறுப்பினர்கள் கவலைப்படுகின்றனர். அவருடன் நீண்டகாலம் நட்பில் இருக்கும் துணை நடிகர்கள் சிலர், அவரது பிறந்தநாளின்போது சந்தித்துள்ளனர். 

அவர்களிடம், ' விஜயகாந்த் எப்படியிருக்கிறார்?' எனச் சிலர் கேட்டுள்ளனர். 'மிகுந்த வேதனையாக இருக்கிறது. நாங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டோம். கடந்த காலங்களில் அவரைச் சந்திக்கும்போதெல்லாம், படப்பிடிப்புத் தளங்களில் விடிய விடிய நடந்த காட்சிகளை எல்லாம் உற்சாகத்துடன் விளக்குவார். இப்போது அவரால் எதையும் விளக்க முடியவில்லை. சில நேரங்களில் எழுந்து உட்காருவதற்கே சிரமப்படுகிறார். மருத்துவ சிகிச்சை முடிந்து, மீண்டும் பழைய ஃபார்முக்கு அவர் வருவார்' எனக் கண்ணீருடன் விளக்கியுள்ளனர். "சிங்கப்பூர், அமெரிக்கா என அவருக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதற்காகக் கடுமையாக உழைக்கின்றனர் அவரது குடும்பத்தார். விரைவில் மேல் சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்" என்கிறார் விஜயகாந்தின் நீண்டநாள் நண்பர் ஒருவர்.