``எல்லோரையும் போலத்தான் எங்க அப்பாவும்..!” -விஜயகாந்த்தின் மகன் உருக்கம் | vijayakanth will come back, says his son vijay prabakar

வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (01/09/2018)

கடைசி தொடர்பு:12:57 (01/09/2018)

``எல்லோரையும் போலத்தான் எங்க அப்பாவும்..!” -விஜயகாந்த்தின் மகன் உருக்கம்

ன் தந்தை நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரன் வேண்டுகோள் வைத்துள்ளார்.  

விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், உடல்நலக்குறைபாடு காரணமாக சென்னை மனப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து தே.மு.தி.க வெளியிட்ட அறிக்கையில், `விஜயகாந்த் நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு விஜயகாந்த் உடல்நிலைகுறித்துப் பரவிய வதந்தி தொடர்பாக ,அவரின் மூத்த மகன் விஜய் பிரபாகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ``அப்பா உடல்நிலைகுறித்துப் பல்வேறு வதந்திகள் பரவிவருகின்றன. ஆனால், அப்படி ஒன்றுமே இல்லை. அப்பா உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றால், நான் அங்குதானே இருக்க வேண்டும். நான் எனது சொந்த வேலையாக நெல்லூர் வரை வந்துள்ளேன். அவர் ராஜா மாதிரி இருக்கிறார். நாங்க எல்லோரும் அவரை நல்லபடியா பாத்துக்கிறோம். அவருக்கு ஒன்றும் ஆகாது.

கேப்டன் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக உங்க முன்னாடி வந்து நிப்பார். என் உயிரே போனாலும் அவருக்கு எதுவும் ஆகாது. உங்க எல்லோருக்கும் நிறைய வேலைகள் இருக்கும். நிறையச் சுமைகள் இருக்கும். நீங்க உங்க வேலையைப் பாருங்க. எங்களுக்குத் தேவை எல்லாம் நம்பிக்கை மட்டும்தான். அவர் மீண்டும் திரும்பி வருவார். எல்லோருக்கும் ஒரு வயசுல, ஒரு கட்டத்துல உடல்நலம் சரியில்லாமல்போகும். மீண்டும் சிங்க நடைபோட்டு வருவார். ஏன்னா, அவர் அவ்ளோ நல்லது செய்திருக்கிறார். அவர் கேப்டன். யாரும் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம். நான் இப்போ பேசுறதுக்குக் காரணம், எல்லோரும் எனக்கு போன் பண்ணி கேக்குறாங்க. அவர் நல்லா இருக்கிறார்” என்றார்.