`தீபாவளிக்கு ரிலீஸாக இது பட்டாசு கிடையாது’- ரசிகர்களை சமாதானப்படுத்திய சூர்யா #NGK

'செல்வராகவன் - சூர்யா-யுவன் காம்போவில் உருவாகிவரும் ‘என்.ஜி.கே.’ திரைப்படம்  தீபாவளிக்கு வெளியாகாது' என்ற அறிவிப்பு, சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

என்.ஜி.கே
 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம், `நந்த கோபாலன் குமரன்’. அதாவது, ‘என்.ஜி.கே.’ இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படம், வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டதால் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நேற்று அறிவித்தார்.

என்.ஜி.கே

சூர்யாவின் படம் தீபாவளி ரேஸில் இல்லை என்கிற செய்தி, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் செல்வராகவன்,  ‘அன்பு நண்பர்களே... தாமதத்துக்கு வருந்துகிறோம். நாங்கள் அனைவரும் மிகக் கடுமையாகத்தான் உழைத்தோம். ஆனால், சில விஷயங்கள் எங்கள் கைமீறி நடந்துவிட்டன’ என்று ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா என்.ஜி.கே தாமதம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

என்.ஜி.கே
 

மூவிபஃப் நிறுவனம் சார்பில், ஃபர்ஸ்ட் கிளாப் தமிழ் குறும்படப் போட்டி நடந்தது.  இன்று, அதற்கான விருது விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில், நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அவர், மேடையில் பேசத் தொடங்கியதுமே பார்வையாளர்கள் பலர் என்.ஜி.கே... என்.ஜி.கே என்று கூச்சல் எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய சூர்யா, '‘இதே மேடையிலதான் சொன்னேன். என்.ஜி.கே திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும்னு. ஆனா, இப்போ ரிலீஸ் ஆகல.  எனக்கு இந்தத் தருணத்தில் பாலா அண்ணா சொன்னதுதான் நியாபகம் வருது. தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வர அது பட்டாஸோ பொங்கலோ கிடையாது. அது, படம். சில விஷயங்கள் நம்மள மீறி நடக்குது. எல்லாமே ஒரு நம்பிக்கையில் போய்கிட்டு இருக்கு. இந்தப் படத்தை எப்படி ஆரம்பிச்சோமோ, அதே பாசிட்டிவிட்டியோட முடிப்போம். ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கு. இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க. சொன்ன மாதிரி தீபாவளிக்கு வெளியிட முடியலன்னு வருத்தமா இருக்கு. உங்க அன்பு எப்பவும் என்கூட இருக்கும்னு நம்புறேன்'’ என்றார் நெகிழ்ச்சியுடன். உடனே ரசிகர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி, தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!