பைக் ஓட்டுபவர்களின் கழுத்தில் பாசக்கயிறு வீசிய எமதர்மராஜா! போலீஸாரின் ஹெல்மெட் விழிப்புஉணர்வு

கோவில்பட்டியில்,  எமதர்மராஜா வேடம் அணிந்து, ஹெல்மெட் அணியாதவர் கழுத்தில் பாசக்கயிற்றைச் சுற்றி, ஹெல்மெட் அணிதல் குறித்து நூதன முறையில் விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. 

ஹெல்மெட் அணியாதவர்களிடம் விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்ட போலீஸார்


இன்றுமுதல், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுடன் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதுகுறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை கோவில்பட்டி  டி.எஸ்.பி.,ஜெபராஜ் தொடங்கி வைத்தார்.  இந்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சியில், எமதர்மராஜா வேடமணிந்த  ஒருவர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களைக் கையில் வைத்திருந்த பாசக்கயிற்றைக் கழுத்தில் மாட்டி, "பைக் ஓட்டுபவர்கள் தலையில் ஹெல்மெட் அணிய வேண்டும். இந்தியாவில் ஒரு வருடத்தில் சாலையில் நிகழும் விபத்துகளில் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். தலைக்கவசம் உங்கள் உயிரைப் பாதுகாக்கும் கவசம். சட்டத்திற்காகப் பயந்து  ஹெல்மெட் அணிவதைவிட, உயிருக்காகப் பயந்து ஹெல்மெட் அணியுங்கள்.

பைக் ஓட்டுபவர்களின் கழுத்தில் பாசக்கயிறு வீசிய எமதர்மராஜா!

கடமைக்காக தொப்பி போன்ற ஹெல்மெட் அணியாமல், தரமான ஹெல்மெட்டுகளை வாங்கி அணியுங்கள். பைக் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஹெல்மெட் அணிந்தும், ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்தபடி பேசிக்கொண்டே பைக் ஓட்டுகிறார்கள். பைக் ஓட்டிச் செல்லும்போது செல்போன்  அழைப்பை ஏற்க வேண்டாம். அழைப்பது எமனாகக்கூட இருக்கலாம்" எனப் பேசி, விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார். மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, நான்கு சக்கரவாகனங்களில் சீட் பெல்ட் கட்டாயமாக அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட சாலை விதிமுறைகள்குறித்து துண்டுப்பிரசுரங்களையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது. ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிவந்த வாகனஓட்டிகளுக்குப் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விழிப்பு உணர்வுப் பிரசார நிகழ்ச்சி, கோவில்பட்டி மாதாகோவில் தெரு, எட்டயபுரம் சாலை, புதிய சாலை உள்ளிட்ட இடங்களிலும்  நடைபெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!