வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (01/09/2018)

கடைசி தொடர்பு:15:01 (01/09/2018)

``நானும், அனிதாக்களில் ஒருத்திதான்..!" ஒரு கிராமத்துப் பெண்ணின் கடிதம் #RememberingAnita

``நானும், அனிதாக்களில் ஒருத்திதான்..!

வலிகளை உணராத சமூகத்துக்கு...

வணக்கம்.

நான் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மாணவி. எங்க கிராமத்துப் பெயரைச் சொன்னாகூட உங்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குக் குக்கிராமம். வசதி, வாய்ப்பு, அடிப்படை வசதினாகூட என்னனு தெரியாத அளவுக்கு எங்களை அரசாங்கம் வெச்சிருக்கு. தெனமும் உழைச்சா சாப்பாடுங்கிறது எங்க சித்தாந்தம்.

குளிர் காய்ச்சலோ, பிரசவ வலியோ... வீட்டுல இருக்க சாமிய கும்பிட்டுகிட்டு இலை, தலை, காய், மருத்துவச்சியை நம்பி பொழப்ப ஓட்டுறோம். ரொம்ப சிக்கல்னா `பக்கத்து டவுன் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க'ன்னு சொல்லுவாங்க. எத்தனையோ உசுரு டவுன்ல இருக்கிற பெரிய ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போகுறதுக்கு முன்னாடியே செத்துப் போயிருக்கு. பிஞ்சுக் குழந்தைங்க திடீர் நோயால செத்துப் போயிருக்காங்க. என்ன காரணம்னு எங்க யாருக்குமே தெரியாது. காய்ச்சல் வந்தா கஷாயம்தான் எங்க மருந்து. ரொம்பக் கொடூரமான நோயா இருந்தா கைமருந்து சாப்பிட்டும் சரியாகாம, வீட்டிலேயே முடங்கிக் கிடக்குறவங்களும் இருக்காங்க.

அனிதா

இதை மாதிரி பேர் தெரியாத நோயால செத்துப் போனவங்களை எல்லாம் கடந்து வந்தவதான் நான். நாளைக்கு இதே நிலைமை என் அம்மாவுக்கும் வரலாம்ல. அதான், மருத்துவம் படிச்சு எங்க கிராமத்துக்கு உதவி பண்ணணும்னு ஆசையா இருக்கு. அரசுப் பள்ளியில படிச்சு நல்ல மார்க் வாங்குற பொண்ணு நான். சரளமா எனக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியாது. ஆடு, மாடுங்க மேய்ச்சிட்டு கிராமத்தில் இருக்கிறவளுக்கு மருத்துவப் படிப்பு கேட்குதாக்கும்னு டவுன்ல இருந்து வர்ற சொந்தக்கார புள்ளைங்க கேலி பண்ணுங்க. ஆனாலும், டாக்டராகி இந்தக் கிராமத்துக்கு உதவி பண்ணணும்னு ஆசைப்பட்டேன்.

2017, செப்டம்பர் 1 அன்னைக்கு `நீட்' தேர்வுல பாஸ் ஆகாததுனால அனிதா அக்கா தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு செய்தி பார்த்தேன். நானும், அனிதாக்களில் ஒருத்திதான். என்னை மாதிரி மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னுதானே அனிதா அக்காவும் நினைச்சிருக்கும். மத்தவங்க நோயால் துடிக்கிறதைப் பார்த்து நாம கண்டிப்பா டாக்டர் ஆகணும்னு ஆசைப்படும் போது, பெத்த அம்மாவையே மருத்துவ வசதி இல்லாததால பறிகொடுத்த அந்த அக்காவுக்கு டாக்டர் ஆச வந்தது தப்பா சொல்லுங்க...

 கூலி வேலை பார்க்குற ஏழைக் குடும்பத்தில் பிறக்குறவங்க மருத்துவம் படிக்கக் கூடாதா... வசதியான வீட்டுப் புள்ளைங்களால மட்டும்தான் படிக்க முடியுமா... இப்படியெல்லாம் யோசிச்சுதான அனிதா அக்கா நீட்டுக்கும், அதை ஆதரிக்கிற சமூகம், அரசுக்கு எதிரா போராடிப் பார்த்துச்சு.. முடியல.. மனசுல நான் இதுவாகத்தான் ஆகப் போறேன்னு சின்ன வயசுல இருந்து ஆசைப்பட்டு, அதுக்காக கஷ்டப்பட்டு படிச்சு நல்ல மார்க் வாங்கியும் அந்த இடத்தை அடைய முடியாம உசுர சுமந்துட்டு இருக்கிறதுக்கு செத்தே போயிடலாம்னு தான் அந்த முடிவை எடுத்துருக்கும். சாதாரண மக்கள் கனவு கலையுறதெல்லாம் அரசாங்கத்துக்கு ஒரு பொருட்டே கிடையாதா சொல்லுங்க. 

எத்தனையோ அரசு அதிகாரிங்க அந்த அக்கா இறந்தப்போ, தமிழ்நாட்டுக்கு நீட் வேண்டாம்னு கொடி பிடிச்சாங்க. கொஞ்ச நாளிலேயே அனிதா அக்காவை மறந்த மாதிரி, அந்தப் போராட்டத்தையும் மறந்துட்டாங்க. போன வருஷம் நடந்த நீட் தேர்வினாலும் நிறைய பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. பிரதீபா அக்கா தற்கொலையை மறக்க முடியுமா சொல்லுங்க... பன்னிரண்டாம் வகுப்புல நல்ல மார்க் வாங்கி, நீட் தேர்வுக்காக ஒரு வருஷம் போராடிப் படிச்சும் தேர்வாக முடியாம உயிர முடிச்சிக்கிட்டு போயிடுச்சு. சிபிஎஸ்சி, இங்கிலீஷ் மீடியத்துல படிக்குற பசங்கதான் நீட்ல பாஸ் ஆகுறாங்க. அப்போ, அரசுப் பள்ளியில் படிக்குறவங்கலாம் என்ன பாவம் செஞ்சாங்க..! அவங்க எல்லோரும் டாக்டராகத் தகுதியே இல்லாதவங்களா..?

அனிதா

நீட்ல பாஸ் ஆகலைன்னாலும், பணம், காசு இருக்குற வசதியான வீட்டுப் புள்ளைங்க வெளி நாட்டுக்குப் போய் டாக்டராகிடுவாங்க. எதுவுமே இல்லாத நாங்க அந்தக் கனவோடு சேர்த்து எங்க உசுரையும் கொடுத்துடணுமா?

ஏழையாப் பொறந்தா அவ ஆசைப்படுற படிப்பைக் கூட படிக்க முடியாதா.. ஏழைக்குக் கனவு காண உரிமை இல்லைங்கற மாதிரி சட்டம் எதையாவது கொண்டு வரமுடியுமான்னு பார்த்து பரிசீலனை பண்ணுங்க. எங்கள மாதிரி கிராமத்துப் புள்ளைங்களோட உயிராச்சும் மிஞ்சும். டாக்டருக்குப் படிச்சு கோட்டு சூட்டு போட்டு பணம் சம்பாதிக்க நாங்க வரலீங்க. எங்க சனங்க உசுரக் காப்பாத்தணும். அந்த ஆச மட்டும்தான்.

இப்போ என்கூட இருக்கிற பயலுக நீ பேசாம ஏதாச்சும் படிப்பை படி.. `நீட்' தேர்வை எதிர்த்து உன்னால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க. தலைமுறை, தலைமுறையா படிக்குறவங்களே `நீட்' வேணாம்னு போராடும் போது, முதல் தலைமுறை மருத்துவச்சியா உருவாகப் போகிற நான் போராடாம இருப்பேனா..! `நீட்' எங்களுக்குத் தேவையில்ல.. நீட்டை நாட்டை விட்டுத் துரத்துங்க..

முதல் தலைமுறை நிமிரும்போது ஒரு குடும்பம் மட்டுமல்ல, ஒரு கிராமமே நிமிரும். தலைமுறைக் கனவைக் காப்பாத்துங்க ப்ளீஸ்.

இப்படிக்கு,

ஏழைத் தகப்பனின் மகள்.


டிரெண்டிங் @ விகடன்