தாயின் அன்பு கிடைக்காததால் திருடனை நம்பிய மகள்! 

 போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த அன்னலட்சுமி மற்றும் குடும்பத்தினர்

சென்னையில், தாய் செய்த தவறு காரணமாக அவரின் மகள் வீட்டை விட்டு ஓடியுள்ளார். புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் போலீஸ் டீம்  அவரை மீட்டுள்ளது. 

திருச்சியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவருக்குத் திருமணமாகி, 14 வயதில் தேவி (பெயர் மாற்றம்) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த கோவிந்தராஜ், திருச்சியில் வேலைபார்த்தபோது அன்னலட்சுமியுடன் நட்பு ஏற்பட்டது. அதன்பிறகு மகளை அழைத்துக்கொண்டு கோவிந்தராஜுடன் சென்னை, கண்ணகி நகருக்கு வந்துவிட்டார் அன்னலட்சுமி. 

கணவன் மனைவியாக வாழ்ந்த இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. அதன்பிறகு, முதல் மகளை அன்னலட்சுமி சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த தேவி, கடந்த 30-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் அன்னலட்சுமி புகார் கொடுத்தார். புகார் கொடுத்ததும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த்ராஜா, கார்த்திகேயன் மற்றும் போலீஸார், தேவியைப் பல இடங்களில் தேடினர். தேவியின் தோழிகளிடம் விசாரித்தபோது, போலீஸாருக்கு அவர் இருக்கும் இடம் தெரியவந்தது. உடனடியாக பெற்றோரை அழைத்துக்கொண்டு தேனாம்பேட்டைக்கு போலீஸார் வந்தனர். அங்கிருந்த தேவியை மீட்டு, பெற்றோரிடம்  ஒப்படைத்தனர். புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய தேவியை போலீஸார் மீட்டுள்ளனர். இந்த மகிழ்ச்சியில் இருந்த போலீஸாருக்கு, உயரதிகாரிகளிடமிருந்து கடும் அர்ச்சனை கிடைத்துள்ளது. இதனால், தூங்காமல் விடிய விடிய விசாரித்த போலீஸார் கவலையில் உள்ளனர். 

காணாமல்போன தேவி விவகாரத்தில் என்ன நடந்தது என்று விசாரித்தோம். 

``அன்னலட்சுமி, சமையல் வேலை செய்துவருகிறார். கோவிந்தராஜ், வாட்ச்மேனாகப் பணியாற்றுகிறார். ஒன்றரை வயதில் உள்ள குழந்தையை மட்டும் அன்னலட்சுமி கவனித்ததால், தேவி கடும் மனவருத்தமடைந்தார். இதற்கிடையில், தேவி வீட்டுவேலைக்கும் அனுப்பப்பட்டுள்ளார். கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த தேவி, கடந்த 30-ம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரின் தோழியிடம் விசாரித்தபோது, ராஜா என்ற திருடனுடன் அவர் சென்ற விவரம் கிடைத்தது. இதனால், தேவிக்கு ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்று நாங்கள் துரிதமாகத் தேடினோம். ராஜாவின் உறவினர் வீடு தேனாம்பேட்டையில் உள்ளது.  அதனால், நள்ளிரவில் சென்றோம். அங்கு, தேவி இருந்தார். அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். அன்னலட்சுமிக்கும் தேவிக்கும் சில அறிவுரைகளைப் பெண் காவலர்கள்மூலம் கொடுத்துள்ளோம். மகளைக் கண்ட அன்னலட்சுமி கண்ணீர்மல்க எங்களுக்கு நன்றி தெரிவித்தார்'' என்றனர். 

 இதற்கிடையில், தேவி விவகாரத்தில் போலீஸார் பணம் கேட்பதாக உயரதிகாரிகளுக்குத் தகவல் சென்றுள்ளது.  அதனால்தான் போலீஸ் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டவரை விசாரிக்காமல் விடிய விடிய தூங்காமல் தேவியைத் தேடிய போலீஸாரை எச்சரித்துள்ளனர். 'தேவி விவகாரத்தில் நாங்கள் யாரும் பணம் கேட்கவில்லை' என்று சம்பந்தப்பட்ட போலீஸார் தெரிவித்தனர். இவ்வாறு எங்கள்மீது புகார் கொடுக்கப்பட்டதற்கு ஒரு காரணம் இருப்பதாக கண்ணகி நகர் போலீஸார் தெரிவித்தனர். அதாவது, தேவியைக் காணவில்லை என்று புகார் கொடுக்க வந்தபோது, செல்போனில் அங்கு நடக்கும் தகவல்களை ரெக்கார்டு செய்தனர். அதை கண்ணகி நகர் போலீஸார் கண்டித்துள்ளனர். இதனால்தான் எங்கள்மீது தேவையற்ற புகார் உயரதிகாரிகளிடம் சொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்" என்கின்றனர் போலீஸார். 

 அன்னலட்சுமியிடம் பேசியோது, ``என்னுடைய முதல் கணவர், 24 மணி நேரமும் குடித்துவிட்டு என்னை துன்புறுத்துவார். வேலைக்கும் செல்லமாட்டார்.  அதனால்தான் கோவிந்தராஜுடன் வாழ்ந்துவருகிறேன். தேவியை இனிமேல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வேன்" என்றார். 

தேவியிடம் பெண் காவலர்கள் விசாரித்தபோது,  'என்னுடைய அம்மா இரண்டாவது கணவருடன் வாழ்வது எனக்குப்பிடிக்கவில்லை.  என்னை அவர் சரிவர கவனிப்பதில்லை. என்னிடம் அவர் அன்பாகப் பேசுவதில்லை. அதனால்தான் வீட்டை விட்டு வெளியில் சென்றேன்' என்று கூறியிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!