வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (01/09/2018)

கடைசி தொடர்பு:15:35 (01/09/2018)

`சாதாரணமாகக் கருதக் கூடாது!' - ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளிக்க வைகோ வலியுறுத்தல்

``வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

ரவிக்குமார் 
 

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் உள்ள கொலைப்பட்டியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  ரவிக்குமாரின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான கெளரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவரான அமோல் காலேயிடம் கர்நாடக காவல்துறை விசாரணை நடத்தியது. அவரின் நாட்குறிப்பு ஒன்றையும் கைப்பற்றியது. அதில் 34 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. கெளரி லங்கேஷை தொடர்ந்து இந்த 34 பேரையும் அவர்கள் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ரவிக்குமார் தரப்பிலிருந்து பாதுகாப்புக் கோரி தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

வைகோ
 

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், `விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் உயிருக்கு அச்சுறுதல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. முற்போக்கு சிந்தனையாளரும் எழுத்தாளருமான பத்திரிகை ஆசிரியர் கௌரி லங்கேஷ், பெங்களூருவில் இந்துமத அடிப்படைவாத கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக்குழு, கொலைக் குற்றவாளியின் நாட்குறிப்பைக் கைப்பற்றி இருக்கிறது. கௌரி லங்கேஷ் கொலையைத் திட்டமிட்டுச் செய்த அமோல் காலே என்ற கொலைக் குற்றவாளியின் நாட்குறிப்பில் கௌரி லங்கேஷ் போன்று 34 பேரை கொல்வதற்கு பட்டியல் தயாரித்து வைத்துள்ளனர். இதில் கர்நாடக மாநிலத்தில் 8 பேரும், இந்தியா முழுவதும் பிற மாநிலங்களில் 24 பேரும் கொலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. இதன் அடிப்படையில்தான் மத்திய புலனாய்வுத்துறை தமிழக அரசுக்கு வழங்கி உள்ள அறிவுறுத்தலில், எழுத்தாளர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கை செய்துள்ளது.

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்துத்துவ மதவெறி சக்திகள், கொலைவெறி கொண்டு அலைவதை நாடு முழுவதும் காண முடிகிறது. இந்துத்துவ கோட்பாட்டை எதிர்த்து கருத்துப் பரவலில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பகிரங்கமாகவே மிரட்டப்படுவதோடு உயிருக்கும் உலை வைக்கும் போக்கு அதிகரித்து விட்டது. நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள், இடதுசாரி கொள்கையாளர்கள் மதவெறி அமைப்புகளால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கின்றனர். எழுத்தாளர் ரவிக்குமார் கொள்கை அளவில் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கூட்டத்தின் நோக்கங்களை விமர்சனம் செய்து வருகிறார். மத நல்லிணக்கத்தைச் சீரழித்து, பன்முகத்தன்மையை அழிக்கும் வகையில் வன்முறை வெறியாட்டம் போடும் இந்துத்துவ சக்திகள், ரவிக்குமார் போன்றவர்களுக்கு குறி வைத்து இருப்பதை மத்திய, மாநில அரசுகள் சாதாரணமாகக் கருதக் கூடாது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடனடியாக இதில் தலையிட்டு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கும்பலைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் புதுச்சேரி மாநில அரசும் எழுத்தாளர் ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உடனடியாக ஏற்பாடு செய்திட வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க