வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (01/09/2018)

கடைசி தொடர்பு:16:15 (01/09/2018)

`இடைத்தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும்’ - ஓ.பன்னீர்செல்வம்

``திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களோடு தினகரன் அணி அரசியலில் இருந்தே காணாமல் போய்விடும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ பன்னீர்செல்வம்

நெல்லை மாவட்டம், சிவகிரி தாலுகாவுக்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் கிராமம் உள்ளது. 18-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னரான பூலித்தேவன், ஆங்கிலேயருக்கு வரி செலுத்த மறுப்பு தெரிவித்து சுதந்திர தாகத்துக்கான முதல் கலகக்குரலை எழுப்பினார். அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று அரசு சார்பாக விழா நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவனின் நினைவு இல்லத்தில் இன்று அவரது 303-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பூலித்தேவனின் வாரிசுகள் சார்பாகப் பால்குடம் ஊர்வலம் எடுத்து வரப்பட்டது. பின்னர், பூலித்தேவனின் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பாகத் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் பூலித்தேவன் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 303-வது பிறந்த தினத்தையொட்டி, தமிழக அமைச்சர் பெருமக்களோடு அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அரசு விழா எடுக்கப்பட்டு வருகிறது. அவர் வாழ்ந்த இந்த நெற்கட்டும்செவல் பகுதி சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியின் மேம்பாட்டுக்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பூலித்தேவன் வாழ்க்கை வரலாறு, சுதந்திரப் போராட்டத்துக்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தெரிந்துகொள்ள வகை செய்யப்படும். களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் மரம் வெட்டி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி புஷ்கரம் விழா அரசு விழாவாக நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆறுகளில் கழிவுகள் கலக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் கழிவுகளைச் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

டி.டி.வி.தினகரன் வானத்தை அண்ணார்ந்து பார்த்து பகல் கனவு காண்கிறார். அதனால் பலவாறாக பிதற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் பேச்சில் ஒருவார்த்தை கூட உண்மை கிடையாது என்பதை தமிழக மக்கள் மிகநன்றாகவே அறிவார்கள். திருவாரூர் முதல் திருப்பரங்குன்றம் வரை அ.தி.மு.க வெற்றி பெறும். இந்த இடைத்தேர்தல்களோடு தினகரன் அணி அரசியலில் இருந்தே காணாமல் போய்விடும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் புதிய கூட்டணி ஏற்படும்" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஒ.எஸ்.மணியன், துரைகண்ணு, மணிகண்டன், பாஸ்கரன், திண்டுக்கல் சீனிவாசன், வி.எம்.ராஜலட்சுமி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் தலைமையில் 1000-க்கும் அதிகமான காவலர்கள் ஈடுபட்டனர். இந்த விழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விழாவுக்காக நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று ஒருநாள் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அடைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.