``விவாதிக்க நான் தயார்"- அமைச்சர் வேலுமணிக்கு சவால்விடும் சமூக ஆர்வலர் | Coimbatore Rti Activist challange Minister Velumani

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (01/09/2018)

கடைசி தொடர்பு:15:50 (01/09/2018)

``விவாதிக்க நான் தயார்"- அமைச்சர் வேலுமணிக்கு சவால்விடும் சமூக ஆர்வலர்

``உள்ளாட்சித்துறை ஊழல் தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்'' என்று சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் கூறியுள்ளார்.

டேனியல் ஜேசுதாஸ்

ஸ்மார்ட் சிட்டி திட்டம் உட்பட உள்ளாட்சித்துறையின் அனைத்துத் துறைகளின் ஒப்பந்தத்திலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தலையீடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தப்புள்ளியில் வேலுமணி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, ``ஸ்டாலின் விரும்பினால் உள்ளாட்சித் துறையின் சாதனைகள் குறித்து மக்கள் மன்றத்தில் விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா?” என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி சவால் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஊழல்களை அம்பலப்படுத்தி வரும் கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ், ``வேலுமணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளாட்சித்துறையில் உள்ள பல ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவன் என்ற முறையில் கூறுகிறேன். வேலுமணியுடன் விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எந்த இடம் என்பதை அவர் சொல்லட்டும். நான் வருகிறேன். விவாதம் செய்ய வாருங்கள் என்று சவால் விடுத்தால், தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு டெண்டர் விட்டது பொய் ஆகிவிடுமா. தரமற்ற சாலைகள் சீராகிவிடுமா. சென்னை, கோவை உட்பட அனைத்துப் பகுதிகளிலும் உள்ளாட்சித்துறையில் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களுக்கத்தான் டெண்டர் விடப்படுகிறது. கோவை மாநகராட்சியில், இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டாலும் பதில் தர மறுக்கின்றனர். தவறு செய்யவில்லை என்றால், எதற்காக தகவலை தர மறுக்க வேண்டும்” என்றார்.