` 55,000 ஏக்கர் கோயில் நிலம் எங்கே?' - ஆலய மீட்புக்குழுவினர் உண்ணாவிரதம் | To restore temple assets -h.raja organising fasting

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (01/09/2018)

கடைசி தொடர்பு:16:33 (01/09/2018)

` 55,000 ஏக்கர் கோயில் நிலம் எங்கே?' - ஆலய மீட்புக்குழுவினர் உண்ணாவிரதம்

இந்து ஆலய மீட்புக் குழு சார்பாக பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கோயில் சொத்துகளை மீட்கவும் கோயில் சொத்துகளுக்கு முறையான வாடகை வசூலிக்கப்படாததைக் கண்டித்தும்  வள்ளுவர் கோட்டத்தில் நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னின்று நடத்தவுள்ளார்.

கோயில்

அறநிலையத்துறையைக் கண்டித்து, இந்திய அளவில் உள்ள இந்து அமைப்புகள்  ஒன்று சேர்ந்து இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க உள்ளன. தமிழகத்தில் உள்ள கோயில்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்க வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கூறிவரும் ஹெச்.ராஜா இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தற்போது தொடங்கியிருக்கிறார். விரைவில் தமிழகமெங்கும் இந்தப் போராட்டத்தைத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

``இந்து அறநிலையத் துறையில் 38,468 கோயில்கள், திருமடங்கள், திருமட கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களை அரசு கையகப்படுத்தும்போது வழிபாடு நடைபெறும் கோயில்களாகதான் இருந்தன. ஆனால், இன்று 9,000 கோயில்களில் வழிபாடு இல்லை. 2,000 கோயில்கள் இருந்த இடத்தில் கடைகள், ஓட்டல்கள் உள்ளன.  அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் 5.2 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாக அரசு கொள்கை விளக்க குறிப்பு கூறுகிறது. ஆனால், 2018-ம் ஆண்டில் 4.78 லட்சம் ஏக்கர்தான் உள்ளது என்று அரசு கூறுகிறது. 55,000 ஏக்கர் என்ன ஆனது என்று தெரியவில்லை. 4.78 லட்சம் ஏக்கரும் பெரிய அளவில் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை அதிகாரிகள் மீட்கவில்லை. ஆனால், அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்குத் துணை போகின்றனர். இதனால் அறநிலையத்துறையைக் கண்டித்து, இந்து ஆலய மீட்பு சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம்'' என ஹெச்.ராஜா தெரிவித்தார்.