வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (01/09/2018)

கடைசி தொடர்பு:17:25 (01/09/2018)

திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்!

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசுகையில், ``கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 4,05,218 ஆண் வாக்காளர்களும், 4,27,900 பெண் வாக்காளர்களும், 48 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 8,33,166 வாக்காளர்களும் உள்ளனர். கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக 1.9.2018 முதல் 31.10.2018 வரை வைக்கப்படவுள்ளன. மேலும், 8.9.2018, 22.9.2018, 6.10.2018 மற்றும் 13.10.2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். 9.9.2018, 23.9.2018, 7.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய நாள்களில் (காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

1.1.2019 அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம். 1.9.2018 முதல் 31.10.2018 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம்" என்றார்.