வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (01/09/2018)

கடைசி தொடர்பு:17:12 (01/09/2018)

‘பல மாணவர்களின் கனவு கொல்லப்படுகிறது’ - அனிதா நினைவு நாளில் ஸ்டாலின் ட்வீட்

அனிதா இறந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களின் கனவு கொல்லப்படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. கடந்த வருடம் மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினார். தேர்விலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இவரின் இறப்பு தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனிதா தற்கொலைக்கு நீதிகேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவி அனிதா இறந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. 

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின், “ஒரு வருடத்துக்கு முன்பு நீட் அனிதாவை கொன்றது. அதன் பிறகு நீட் தேர்வு ஆயிரக்கணக்கானவர்களின் கனவுகளைக் கொன்றுள்ளது. மொழி மாற்றப் பிழை, போலி சான்றிதழ்கள், தேர்வு மையத்தால் ஏற்பட்ட கொடுமை ஆகியவற்றிலிருந்தே தெரிகிறது நீட் கிராமப்புற, ஏழை மற்றும் இந்தி அல்லாத மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காண்பிக்கிறது என்று” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.