`ஊடகங்களில் வருவதுபோல் எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை!’ - அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை விளக்கம்

வருமான வரித்துறையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி விளக்கமளித்துள்ளார். 

அமைச்சர் விஜயபாஸ்கர்

சத்துணவுப் பணியாளர் பணி நியமனத்துக்காகப் பல்வேறு நபர்களிடமிருந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி ரூ.12,96,000 லஞ்சமாக வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினரிடம் சின்னத்தம்பி ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. 

இந்தநிலையில், தனது வீட்டில் 7.4.2017 அன்று நடந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்படவில்லை என விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித்துறை சோதனை பற்றிய சில செய்திகள் அரசியல் எதிரிகளால் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வருமான வரித்துறையினர் கடிதம் அனுப்பி விசாரணைக்கு அழைக்கும்போதெல்லாம் நேரில் ஆஜராகி, அவர்களது கேள்விகளுக்கு, அத்துறைக்கு உரிய விளக்கங்களை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள சின்னத்தம்பி, ஊடகங்களில் வெளிவருவது போன்ற எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

சட்டப்படி செலுத்தப்பட வேண்டிய உரிய வருமான வரியைத் தொடர்ந்து முறையாகச் செலுத்தி வருவதாகவும், தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் உண்மைக்குப் புறம்பாகத் தவறானத் தகவல்களைப் பரப்பி வருவது மிகுந்த மன உளைச்சலையும் மன வேதனையையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். வருமான வரித்துறை சோதனை குறித்து தனது குடும்பத்தினர் சட்டரீதியாக எதிர்கொண்டு வரும் நிலையில், அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கி வரும் சூழ்ச்சிகளைத் தானும் தன் குடும்பத்தினரும் அரசியல்ரீதியாகவும் எதிர்கொள்வோம் என்றும் சின்னத்தம்பி, தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!