காவல்துறை பாதுகாப்பு; வீடியோ ஒளிப்பதிவு - பரபரப்புடன் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்

நீதிமன்ற உத்தரவின்படி நிறுத்தப்பட்டிருந்த கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் முழு கண்காணிப்புடன் மீண்டும் இன்று நடைபெற்றது.

கூட்டுறவு சங்கத் தேர்தல்

தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பல இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு பல இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஏழு கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ரத்து செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு இன்று மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அதன்படி கொரடாச்சேரி கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம், மன்னார்குடி, மணலி போன்ற கூட்டுறவு சங்கங்களில் மறு தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்தக் கூட்டுறவு சங்கத் தேர்தல், தற்போது நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினரின் பலத்த பாதுகாப்போடும், தேர்தல் முழுவதும் கேமராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தக் கூட்டுறவு சங்கத்தில் மொத்தம் 210 வாக்குகள் உள்ளன. 6 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் தேர்தலை நடத்தி வருகின்றனர். தேர்தலின் முடிவுகள் நாளை மறுநாள் 3-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
 

படம்:ஏ.எஸ்.ஈஸ்வர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!