திக்குறிச்சி மகாதேவர் கோயில் மரகத முகம், ஐம்பொன் சிலைகள் கொள்ளை! | The idols were stolen in Shiva temple

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (01/09/2018)

கடைசி தொடர்பு:18:40 (01/09/2018)

திக்குறிச்சி மகாதேவர் கோயில் மரகத முகம், ஐம்பொன் சிலைகள் கொள்ளை!

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோயிலின் பூட்டை உடைத்து, ஐம்பொன் சிலைகள், மரகதத்தால் ஆன மூலவரின் முகசார்த்து ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோயிலின் பூட்டை உடைத்து, ஐம்பொன் சிலைகள், மரகதத்தால் ஆன மூலவரின் முகசார்த்து ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திக்குறிச்சி மஹாதேவர் கோயில்

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த மகாதேவர் கோயில் உள்ளது. குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களில் 2 வது சிவாலயமாக இந்தக் கோயில் விளங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்து நடை சார்த்தப்பட்டது. இன்று காலை கோயில் நடையைத் திறக்க வந்த பூசாரிகள், கோயிலின் முன்பக்கம் மற்றும் உள்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது மூலவர் கருவறை மற்றும் நகைகள் பாதுகாப்பு அறைகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 மற்றும் 2.5 கிலோ எடையுள்ள பழைமையான ஐம்பொன் சிவன் உற்சவர் சிலைகளும், 4 கிலோ எடையுள்ள ஐம்பொன் முருகன் சிலை, 4 கிலோ எடையுள்ள விநாயகர் சிலை மற்றும் செம்பாலான நந்தி சிலைகளும் கொள்ளைபோனது தெரியவந்தது.

திக்குறிச்சி மஹாதேவர் கோயில்

மேலும் தங்க மாலைகள், ருத்திராட்சம், பொட்டு, செம்பு, வெள்ளித் திருமுகம், ஆராட்டுக்குப் பயன்படும் வெள்ளிக் கொடை, மூலவரை அலங்காரம் செய்ய பயன்படுத்தும் மரகதத்தாலான திருமுகமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளைப் போன நகைகள் அனைத்தும் நூறாண்டுக்கு மேல் பழைமையான சிலைகள் எனக் கூறப்படுகிறது. நகைகளின் மதிப்பு 25 லட்சத்துக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மார்த்தாண்டம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பழைமையான சிவன் கோயிலில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.