`நிதி ஒதுக்குகிறதாக அரசு சொன்னது; ஆனா எந்த நிதியும் வரல'- வேதனையில் ஒகேனக்கல் பரிசல் ஓட்டி | Coracle oarsmen complaints about government

வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (01/09/2018)

கடைசி தொடர்பு:18:27 (01/09/2018)

`நிதி ஒதுக்குகிறதாக அரசு சொன்னது; ஆனா எந்த நிதியும் வரல'- வேதனையில் ஒகேனக்கல் பரிசல் ஓட்டி

``அரசு நிதி ஒதுக்குகிறதாகச் சொன்னாங்க. ஆனா யாருக்கும் எந்த நிதியும் வரவில்லை என்று வேதனையுடன் கூறினார் ஒகேனக்கல் பரிசல் ஓட்டி சிவா.

எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் குதூகலத்துடன் காணப்படும் ஒகேனக்கல் அருவி, இன்று வெறிச்சோடி கிடக்கிறது. காவிரியாற்றில் கடந்த சில நாள்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. 50 நாள்களாகத் தொடரும் தடையால் பரிசல் ஓட்டிகள் வருமானமின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பரிசல் ஓட்டி சிவா என்பவரிடம் பேசினோம். ``காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூருக்குப் போற உபரி நீர் மட்டும் இங்க கொஞ்சம் தங்கி இருக்கும். இங்க நாங்க முறையா அனுமதி வாங்கி இந்த ஒரு இடத்துல மட்டும் பரிசல் இயக்கி வருகிறோம். அதுவும் இந்த ரெண்டு நாளாகத்தான். ரொம்ப நாள் கழிச்சி இப்போதான் பரிசல் மேல கைவைக்கிறோம். அதுவும் சில பேருக்கு மட்டும்தான் அனுமதி அளிச்சிருக்காங்க. மீதி பேர் சும்மாதான் இருக்காங்க.எங்களுக்கு இதைவிட்டா வேற எந்தத் தொழிலும் தெரியாது.

பொண்டாட்டி புள்ளைங்க எல்லாரையும் அவங்க அம்மா வீட்டுக்கு வெளியூருக்கு அனுப்பி வெச்சிட்டோம். சிலபேர் அவங்க சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போய்ட்டாங்க. நாங்க இங்க இருக்கிற மீனைப் புடிச்சி அதுல பசியாத்திக்கிட்டோம். வீட்டுக்குள் தண்ணியெல்லாம் வந்துடுச்சி. அரசு நிதி ஒதுக்குகிறதாகச் சொன்னாங்க. ஆனா, யாருக்கும் எந்த நிதியும் வரவில்லை. கலெக்டர் அம்மா வந்தாங்க. அமைச்சர் வந்தாரு எல்லாம் பாத்துட்டுப் போனாங்க. ஆனா, எங்களுக்கு ஒரு மாதமாகியும் எந்த நிதியும் வரல" என்றார் வேதனையுடன்.

வெள்ளத்தில் வீட்டை இழந்த ஒருவரிடம் பேசியபோது, ``ஒவ்வொரு தடவை வெள்ளம் வரும்போதும் இதே மாதிரிதான் அதிகாரிங்க வருவாங்க, பாப்பாங்க ஆறுதல் சொல்வாங்க. நிதி தரோம்னு சொல்லிட்டுப் போய்டுவாங்க, ஆனா அவங்ககிட்ட இருந்து எந்த நிதியும் வராது. நாங்களே பாத்து ஏதாவது செஞ்சிக்க வேண்டியதுதான்" என்றார் .  

இதுகுறித்து அதிகாரியிடம் பேசியபோது, ``வெள்ளம் வந்த நேரத்தில இங்க வீடுகளில் தண்ணீர் புகுந்தது உண்மைதான். எல்லா அதிகாரிகளும் வந்து பாத்துட்டுதான் போனாங்க. ஆனா அவங்களுக்கு அறிவிக்க நிதி எல்லாம் எதுவும் இன்னும் வரல. போன தடவை வெள்ளம் வந்து இவங்க வீடு எல்லாம் இழந்தப்போ அரசு இவங்களுக்கு வேற இடம் ஒதுக்கிக் கொடுத்தது. ஆனா இவங்க இங்கதான் ஆத்துக்குப் பக்கமா இருக்குனு மறுபடியும் இங்கயே வந்து தங்கிட்டாங்க. இவங்க மேலயும் தப்பு இருக்கு" என்று கூறினார்.

நீண்ட நாள்களாகப் பரிசல் இயக்காத பரிசல் ஓட்டிகளும், வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களும் அரசின் நிவாரண நிதிக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்ய அரசு முன்வருமா?.


டிரெண்டிங் @ விகடன்