தொகுதிக்குள் வலம் வரும் தம்பிதுரை! - நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தம்? | ADMK MP Thambidurai is conducting a review in the constituency

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (01/09/2018)

கடைசி தொடர்பு:19:40 (01/09/2018)

தொகுதிக்குள் வலம் வரும் தம்பிதுரை! - நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தம்?

இன்று காலை முதல் அதிகாரிகளுடன் தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அதன்படி வேடசந்தூர் தாலூகா கோவிலூர் பகுதியில் பொதுமக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார்.

தம்பிதுரை

கரூர் எம்.பி-யும் மாநிலங்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை குறித்து கடந்த ஜூனியர் விகடன் இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். என்ன செய்தார் எம்.பி என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரை  கரூர் நாடாளுமன்றத் தொகுதி நிலவரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கரூர் தொகுதியில் பெரும்பாலான கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதைக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். இந்நிலையில் நேற்று மாலை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புகொண்ட எம்.பி தரப்பு இன்று காலை வேடசந்தூர் பகுதியில், பொதுமக்களிடம் எம்.பி குறைகேட்க இருக்கிறார். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் வேடசந்தூர் பகுதிக்கு வர வேண்டும் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை அதிகாரிகள் புடைசூழ தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் தம்பிதுரை.

அதன்படி வேடசந்தூர் தாலுகா கோவிலூர் பகுதியில் தம்பிதுரை எம்.பி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார். பொதுமக்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்ததுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இன்று வேடசந்தூர் தாலூகாவின் 38 கிராமங்களிலும் குறைகளைக் கேட்கிறார். நாளை வடமதுரை தாலூகாவில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறைகளைக் கேட்க இருக்கிறார். பத்திரிகையாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றிபெறும். அ.தி.மு.க-வில் எந்தக் குழப்பமும் இல்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது' என்றார். ``ஜூ.வி செய்தியைத் தொடர்ந்து தங்கள் கிராமங்களில் எம்.பி-யைப் பார்க்க முடிகிறது'' என்கின்றனர் கிராம மக்கள்.         

நீங்க எப்படி பீல் பண்றீங்க