திருவாரூர் தொகுதியிலும் அ.தி.மு.க நிச்சயம் வெற்றிபெறும் - சொல்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு | ADMK will sweep by elections, says Minister kadambur raju

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (01/09/2018)

கடைசி தொடர்பு:20:00 (01/09/2018)

திருவாரூர் தொகுதியிலும் அ.தி.மு.க நிச்சயம் வெற்றிபெறும் - சொல்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு

``திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த 11 தேர்தல்களில் 9 முறை அ.தி.மு.க-தான் வெற்றி பெற்றுள்ளது. மறைந்த தி.மு.க தலைவரின் தொகுதியான திருவாரூர் தொகுதியிலும் நிச்சயம் அ.தி.மு.க-தான் வெற்றிபெறும்" எனச் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் இந்திய அஞ்சல் துறையின் பேமெண்டஸ் வங்கி தொடக்க விழா கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு வங்கிச் சேவையைத் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாமன்னர் பூலித்தேவர் நினைவு மண்டபம் புனரமைப்பு செய்ய ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

ஊழல் நடைபெற்றது எனக் கூறும் நடிகர் கமல்ஹாசன், எந்தத் துறையில் ஊழல் நடைபெற்றது எனத் தெளிவாகக் கூற வேண்டும். இதுவரை அவர், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று காரணம் இல்லாமல் பேசி வருகிறார். எந்த ஒரு குற்றச்சாட்டைச் சொல்லும்போது அதற்கான உரிய ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். கமலுக்கு அரசியல் அனுபவம் இல்லை. தகுந்த ஆதாரத்துடன் சொல்லாமல், நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறார்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என டி.டி.வி.தினகரன் கூறியது ஒன்றும் புதிதல்ல. அவர் அ.தி.மு.க-விலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார். அதனால் அந்த விரக்தியில் அப்படிப் பேசியுள்ளார். தேர்தல் வந்தால் எல்லாரும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றுதான் கூறுவர்கள். திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற 11 தேர்தல்களில் 9 தேர்தல்களில் அ.தி.மு.க-தான் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க-தான் வெற்றி பெற்றது. எனவே, தற்போதும் அ.தி.மு.க-தான் வெற்றி பெறும். திருவாரூரில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நின்றதால் வெற்றி பெற்றார். ஆனால், திருவாரூர் தொகுதியில் வரும் இடைத்தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க-தான் வெற்றிபெறும்"என்றார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் பெறப்பட்டதாக அவரின் தந்தை கூறிய தகவல் குறித்த நமது கேள்விக்கு, "அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்" எனக் கூறி நழுவிச் சென்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க