இரண்டு கும்கி யானைகளுக்கு நடுவே அமர்ந்து பாடம் கற்ற மாணவர்கள்... வனத்துறையின் நல்ல முயற்சி! | Forest department organized an awareness programme for school students

வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (01/09/2018)

கடைசி தொடர்பு:18:55 (01/09/2018)

இரண்டு கும்கி யானைகளுக்கு நடுவே அமர்ந்து பாடம் கற்ற மாணவர்கள்... வனத்துறையின் நல்ல முயற்சி!

முன்னால் கலீம், பின்னால் மாரியப்பன்..! – இரண்டு கும்கி யானைகளுக்கு நடுவே அமர்ந்த மாணவர்கள்.

இரண்டு கும்கி யானைகளுக்கு நடுவே அமர்ந்து பாடம் கற்ற மாணவர்கள்... வனத்துறையின் நல்ல முயற்சி!

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள விவசாய நிலங்களைச் சேதப்படுத்திவந்த பெண் காட்டு யானையைக் காட்டுக்குள் விரட்டுவதற்காக வந்த இரண்டு கும்கி யானைகள் என்ன செய்கின்றன என்று பார்ப்பதற்காக தேவாரத்துக்குப் புறப்பட்டோம். பயணத்துக்கு இடையே ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் சென்றுவிட்டுவரலாம்.

கும்கி யானை

காட்டு யானை மீது கோபம் கொண்ட மக்கள்:

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மா, தென்னை, வாழை, கப்பக்கிழங்கு போன்றவற்றைச் சாகுபடி செய்துவரும் தேவாரம் பகுதி மக்களைப் பல மாதங்களாக அச்சுறுத்திவந்தது ஒற்றைக் காட்டுயானை. மாலை 6 மணிக்கு மேல் யாரும் தங்களது தோட்டத்துக்குச் செல்ல முடியாத சூழலை அக்காட்டு யானை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த ஜூன் 12-ம் தேதி தோட்டத்தில் காவலுக்கு இருந்த சேகர் என்பவர் அந்த ஒற்றை யானையால் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதையறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வருவாய், வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். விரைவில், இப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டு யானையைப் பிடித்து வேறு இடத்துக்கு மாற்றி விடுகிறோம் அல்லது அடர்ந்த காட்டுக்குள் விரட்டிவிடுகிறோம் என்று உறுதியளித்தனர். அதன்படி கடந்த ஜூலை 30-ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து கலீம் என்ற கும்கி யானை தேவாரத்துக்கு வரவழைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாரியப்பன் என்ற கும்கி யானையும் தேவாரத்துக்கு வந்தது. இதனால் காட்டுயானையின் மீது மக்களுக்கு இருந்த அச்சமும் கோபமும் சற்று விலகியது.

கும்கி யானை

கும்கியைப் பார்த்து பதுங்கிக்கொண்ட காட்டு யானை:

தேவார மலையடிவாரத்தில் உள்ள தனியருக்குச் சொந்தமான ஒரு தென்னந்தோப்பில் இரண்டு கும்கி யானைகளும் கட்டப்பட்டிருந்தன. ``ஒற்றைக் காட்டுயானை வரும் வழித்தடங்களைக் கும்கி யானையோடு வந்திருந்த டிராக்கர்கள் ஆய்வு செய்து, காட்டு யானைக்காகக் காத்திருந்தனர். ஆனால், கும்கி யானைகளை அந்தக் காட்டு யானை தூரத்தில் இருந்து பார்த்ததோ என்னவோ மலையை விட்டுக் கீழிறங்கவில்லை என்று கும்கி யானை தேவாரத்துக்கு வந்ததோ அன்றிலிருந்து இன்று வரை அந்தக் காட்டு யானையைக் காணவில்லை. காட்டுக்குள் பதுங்கிக்கொண்டது” என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

யானைகள் பற்றிய விழிப்பு உணர்வு வகுப்பு:

கும்கி யானைகள் கட்டப்பட்டிருந்த இடத்துக்குப் புறப்பட்டோம். சமீபத்தில் பெய்த கனமழையால், அருகில் இருந்த ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கும்கி யானைகளின் இடம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. இதனால் சற்று தொலைவில், புதிதாக ஓர் இடத்தில் கும்கி யானைகள் கட்டப்பட்டிருந்தன. அங்கே பள்ளி மாணவ, மாணவிகள் வரிசையாக அமர்ந்திருந்தனர். என்ன நடக்கிறது என்று அருகில் சென்று பார்த்தோம். வனத்துறை அதிகாரிகள், சுற்றுச்சுழல் ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யானைகள் பற்றிய பல அரியத் தகவல்களை கூறி விழிப்பு உணர்வு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தனர். நாமும்  அந்த வகுப்பில் கலந்துகொண்டோம். காட்டு யானை என்றால் என்ன? மனிதர்கள் இருக்கும் இடத்துக்குள் காட்டு யானை வருகிறதா? அல்லது காட்டு யானைகளில் இடத்துக்குள் மனிதன் வாழ்கிறானா? இது போன்ற பல தலைப்புகளில் வகுப்புகள் நடந்தன.

கலீம் சத்தம் கொடுத்தால் மாரியப்பன் சத்தம் கொடுக்கும். இப்படி அடிக்கடி சத்தம் கொடுக்கும் பிரமாண்ட இரண்டு கும்கி யானைகளுக்கு நடுவே அமர்ந்துகொண்டு யானைகளைப் பற்றி தெரிந்துகொண்டது புது அனுபவமாக இருந்தது என மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக தேவாரம் பகுதி ரேஞ்சர் ஜீவனா கலைவாணனிடம் பேசினோம். ``இதுவரை மூன்று பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு யானைகள் தொடர்பான விழிப்பு உணர்வு வகுப்பு எடுத்திருக்கிறோம். எல்லோரும் அரசுப் பள்ளி மாணவர்கள். அனைவரும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், காட்டு யானை குறித்த புரிந்துணர்வு அவர்களுக்கு உருவாகும். அதன் மூலம் அவர்களது வீட்டில் உள்ளவர்களுக்கு அது சென்று சேரும் என்ற நம்பிக்கையில்தான் இதை நடத்தினோம்” என்றார்.

மிக முக்கியமான விஷயம்.


டிரெண்டிங் @ விகடன்