`மேகமலையைப் புலிகள் சரணாலயமாக மாற்ற வேண்டும்!’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

`வைகையைக் காப்போம் வறட்சியை விரட்டுவோம்’ என்ற முழக்கத்தோடு வைகை ஆறு விழிப்பு உணர்வு பிரசாரத்தில் இறங்கியுள்ளார் அன்புமணி ராமதாஸ். இந்த விழிப்பு உணர்வு பிரசாரத்தின் துவக்க நிகழ்வாக, வைகை ஆறு உருவாகும் இடமான மேகமலையின் அடிவாரமான வாலிப்பாறைக்குச் சென்று அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.

அன்புமணி ராமதாஸ்

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ``மேகமலை வனப்பகுதியில் தொடர்ச்சியாக மரம் வெட்டப்பட்டதால் வறட்சி ஏற்பட்டு வைகை ஆற்றுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனது. எனவே, மேகமலை வன உயிரினக் காப்பகத்தைப் புலிகள் சரணாலயமாக மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றும்போது, மரக்கடத்தலும், வனத்துக்குள் ஏற்படுத்தப்படும் ஆக்கிரமிப்புகளும் தடுக்கப்படும். தமிழக அரசு இயற்கை வளங்களை அழித்துக்கொண்டு இருக்கின்றது. திருச்சி முக்கொம்பு பகுதியில் மணல் கொள்ளை நடைபெற்றதாலே ஷட்டர்  மற்றும் பாலம் பகுதிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. கேரள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதற்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதுதான் காரணம் என அம்மாநில அரசும் கேரள அரசியல்வாதிகளும் பொய் பரப்புகின்றனர். அதற்குத் தமிழக அரசு எந்த ஒரு பதிலும் கூறாமல் இருக்கின்றது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைத் தமிழக அரசு 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

அன்புமணி ராமதாஸ்

பின்னர் அப்பகுதி மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்து பின்னர், அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். அங்கிருந்து தனது பிரசார பயணத்தைத் தொடங்கியவர், வைகை ஆறு பயணிக்கும் பாதைகளான வருசநாடு, மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி வழியாக வைகை அணைக்குச் சென்று அணையைப் பார்வையிட்டார். பின்னர், மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, நாளை விரகனூர், திருப்புவனம், பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக வைகை ஆறு, தனது பயணத்தை நிறைவு செய்யும் இடமான ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தனது பிரசார பயணத்தை நிறைவு செய்கிறார் அன்புமணி ராமதாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!