வெளியிடப்பட்ட நேரம்: 20:07 (01/09/2018)

கடைசி தொடர்பு:20:43 (01/09/2018)

``யு.ஏ.பி.ஏ. சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுங்கள்!" - அனலாகக் கொதிக்கும் குரல்கள்

``யு.ஏ.பி.ஏ. சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுங்கள்!

ழுத்தாளர் வெர்னான் கோன்சால்வேஸ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், அருண் பெரேரா, பத்திரிகையாளர் கவுதம் நவ்லாக்கா, கவிஞர் வரவர ராவ் என முக்கிய ஆளுமைகள் ஐந்து பேர், பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட விவகாரம் இன்றளவும் பற்றிஎரிகிறது. இவர்களின் கைதை எதிர்த்து ஜனநாயக உரிமை அமைப்புகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். 

ஜனநாயகத்தின் உரிமை பற்றி பேசுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான் இப்போதைய டிரெண்டிங் எனச் சொல்ல முடியும். தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் என்று நீளும் செயற்பாட்டாளர்களின் மரண வரிசையில் சில தினங்களுக்கு முன்பு உமர் காலித்தையும் கொல்ல முயற்சி செய்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே தற்போது நடந்துள்ள கைதுகளின் மீதும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கைது செய்யப்பட்டுள்ள அனைவரின் மீதும் கொடிய தடுப்புக் காவல் சட்டமான யு.ஏ.பி.ஏ சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்துள்ளதைக் கண்டித்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பல சமூக ஆர்வலர்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர். 

பேராசிரியர் அ.மார்க்ஸ்:

``சில நாள்களுக்கு முன்பு ஐந்து பேர் யு.ஏ.பி.ஏ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து தற்போது எழுத்தாளர்கள், வக்கீல்கள் ஐந்து பேர் என மொத்தம் பத்து பேர் யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 'பீமா கொரேகான்' என்னுமிடத்தில் 1818 ஜனவரி 1 அன்று பிரிட்டிஷ் படை, பட்டியலின மக்களின் உதவியுடன் உயர்சாதியினரின் படையைத் தோற்கடித்தனர். தீண்டாமை போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட இந்த நிகழ்வு முக்கியமான ஒன்றாக அமைந்தது. இதை நினைவுகூரும் வகையில் மக்கள் அங்கு ஆண்டுதோறும் கூடுவது வழக்கம். இப்படி 200 ஆண்டுகளாகக் கூடிய கூட்டத்தில் 'நவீன பேஷ்வாலிய ஒழிப்புப் பிரகடனம்' என்பதை அறிவித்து, அதற்கு 'எல்கார் பரிஷத்' என்றும் பெயரிட்டனர். இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல்கள் நடத்தினர். இதில், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்தும் போனார். இந்த விவகாரத்தை தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.

அதுமட்டுமல்ல, பழங்குடிகளுக்காகப் போராடுபவர்கள், தலித் எழுச்சிக்காகப் போராடுபவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் இணைவதைச் சிலரால் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் தொடர்ச்சியாக இப்படிப்பட்டச் செயல்களில் ஈடுபடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத் தேர்தலின்போது, பல என்கவுன்டர் கொலைகள் செய்யப்பட்டதை நாம் நினைவுகொள்ள வேண்டும். இவர்களுக்கும் அப்படியான நிலைமை வரக்கூடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, யு.ஏ.பி.ஏ போன்ற கொடூரமானச் சட்டங்களைத் திரும்பப்பெற்று அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்".

சமூக ஆர்வலர்கள் கைது - சட்டத்தை திரும்பப் பெறுங்கள்

பேராசிரியர் ப.சிவகுமார்:

``கௌரிலங்கேஷ் போலப் பலரையும் சுட்டு அமைதியாக்கிவிட நினைக்கிறார்கள். பழங்குடி மக்கள் போராடும்போது, அனைவருமே மாவோயிஸ்ட்கள் என்று கூறி சுட்டுகொல்லப்படுகிறார்கள். இதுபோன்ற செயல்களை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். போராட நினைக்கும் பேராசிரியர்களை இப்படிப்பட்ட செயல்கள் மூலம் அச்சுறுத்தி அடக்க நினைக்கின்றனர். ஆனால், செயற்பாட்டாளர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, தொடர்ந்து போராடக்கூடியவர்கள். யு.ஏ.பி.ஏ போன்ற சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மிகப்பெரிய இளைஞர் பட்டாளமும், பேராசிரியர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வழக்கறிஞர்களும் களத்தில் இறங்கிப் போராடுவார்கள். இல்லையென்றால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது" என்றார்.

மேலும், ``மாற்றுக்கருத்தை முன்வைப்போரை `பயங்கரவாதிகள்', `மாவோயிஸ்டுகள்' அல்லது `தடைசெய்யப்பட்ட இயக்கத்தினர்' என முத்திரையிட்டு இவர்கள் மீது யு.ஏ.பி.ஏ சட்டத்தில் கைது செய்யாதே. தேச நலன், தேசப் பாதுகாப்பு, வளர்ச்சி என்கிற பெயரில் கருத்துரிமையைப் பறிக்காதே. ஜனநாயக உரிமைகள், சமத்துவம் ஆகியவற்றை வற்புறுத்தி, அரசின் வளர்ச்சிக் கொள்கைகளையும், சாதி மதங்களின் பெயர்களால் மக்களைப் பிரிப்பதையும், விமர்சிப்பவர்களை 'நகர்ப்புற நக்சலைட்டுகள்' எனப் பெயர் சூட்டி வேட்டை ஆடாதே" என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர். இந்தச் சந்திப்பில் விஞ்ஞானி கோபால், பேரா.லஷ்மணன், பேரா.கல்யாணி, வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, சந்துரு, மில்டன், கார்க்கி வேலன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


டிரெண்டிங் @ விகடன்