வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (01/09/2018)

கடைசி தொடர்பு:21:40 (01/09/2018)

`சேலம் மாவட்டத்தில் புதிதாக 10 கிராமங்களுக்கு மின்சார வசதி!’ - முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் கருமந்துறை மலைக்கிராமத்துக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுவரை மின்சார வசதி செய்யப்படாத 10 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து கொடுக்க மின்சார வழிப் பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகக் கருமந்துறை மலைக்கிராமத்துக்குச் சென்றிருந்தார். அவருக்கு மேளதாளத்தோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளையும் கறவை மாடுகளையும் வழங்கிவிட்டு மேடைக்கு வந்தார். அப்போது மக்கள், முந்தி அடித்துக்கொண்டு முதல்வரிடம் மனுக்களைக் கொடுத்தார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``அம்மாவின் பொற்கால ஆட்சியில் மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். அம்மாவுக்கு முன் எம்.ஜி.ஆர், மலைவாழ் மக்கள் மீது தனிப்பட்ட பாசம் வைத்திருந்தார். மலைவாழ் மக்களுக்கு நிறைய நலத்திட்டங்களைச் செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அம்மாவின் ஆட்சியில் நாங்களும் மலைவாழ் மக்களுக்காக நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறோம்.

கடந்த முறை நாங்கள் இங்கு வந்தபோது தீயணைப்பு நிலையம் கேட்டீர்கள். 1.25 கோடியில் ஒரு தீயணைப்பு வாகனத்தோடு புதிய தீயணைப்பு நிலையத்தை அமைத்திருக்கிறோம். தற்போது விவசாயிகளைச் சந்தித்தபோது இங்கிருந்து அதிக சரக்குகள் ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்வதால் கோழி கூப்பிட்டான் பாலம் பழுதாகி இருக்கிறது. அதைக் கட்டிக் கொடுக்கச் சொன்னார்கள். நிச்சயம் அந்த இடத்தில் புதிய பாலம் கட்டப்படும். விரும்பிய அளவு பெரிதாகப் பசுமை வீடுகள் கட்டிக்கொள்ள தனி ஆணையம் உருவாக்கப்படும். சுதந்திரம் அடைந்து இதுவரை மின்சாரம் இல்லாத கீழ் ஆவாரை, மண்ணூர், இளந்தைவாரி, ஆலங்கரை என 10 கிராமங்களுக்கு  மின் தட வழிகள் அமைக்கப்பட்டு மின்சார வசதி கிடைக்கும்'' என்றார்.