`விசாரணையை எதிர்கொள்ளத் தயார்!’ - பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் பி.ஜெ | PJ supporter explain about sexual complaint

வெளியிடப்பட்ட நேரம்: 21:11 (01/09/2018)

கடைசி தொடர்பு:21:11 (01/09/2018)

`விசாரணையை எதிர்கொள்ளத் தயார்!’ - பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் பி.ஜெ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் குழு அமைக்கப்பட்டு, அதில் தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணையும் தன்னையும் வைத்து விசாரணை நடத்தி அதன் பிறகு குழு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படத் தயாராக இருப்பதாக பி.ஜெ தெரிவித்துள்ளார். 

பி.ஜெ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவராக இருந்த பி.ஜெ என்று அழைக்கப்படும் ஜெய்னுல் ஆபிதீன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, தலைவர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து பி.ஜெ நீக்கப்பட்டார். இந்தநிலையில், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து ஃபேஸ்புக் நேரலையில் பி.ஜெ விளக்கமளித்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜெ ஆதரவாளர், 'பல்வேறு தரப்பிலிருந்து பெண்கள் விவகாரத்தில் பி.ஜெ மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.தவ்ஹீத் ஜமாத்திலிருந்து அவரை நீக்குவதற்காகப் பாலியல் குற்றச்சாட்டு அவர் மீது திணிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் பி.ஜெ மீது தவ்ஹீத் ஜமாத் முறையாக விசாரணை நடத்தவில்லை. தற்போதைய நிர்வாகிகள் கலீல் ரசூல், சம்சுலுஹா ஆகியோர் அவர்களுடைய அதிகாரப் போட்டிக்காக இந்தச் சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண், புகார் அளிக்கவில்லை. மாறாக, பெண்ணின் உறவினர்தான் புகார் அளித்தார். அந்த உறவினரை சிலர் மிரட்டியுள்ளனர். பி.ஜெ மீது பொருளாதாரரீதியாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

`நான் எழுதி மூன் பப்ளிகேஷன் வெளியிட்ட புத்தகத்தைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மூலமாக விற்பனை செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நான் ஒரு கோடி ரூபாய் கேட்டதாகப் பொய் பிரசாரம் செய்கின்றனர். தவ்ஹீத் ஜமாத்தின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் தன் மீது புகார் அளித்தப் பெண்ணை விசாரணை நடத்தி, அதன் பிறகு, அவர் மீது குழு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன்’ என்று பி.ஜெ கூறியிருக்கிறார்' என்றார்.