வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (01/09/2018)

கடைசி தொடர்பு:23:00 (01/09/2018)

3-ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்!

சேலம் மூன்று ரோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுபவர் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ். இவர் அப்பள்ளியில் உள்ள 3-ம் வகுப்பு பெண் குழந்தைகளிடம் சில்மிஷம் செய்துள்ளார். அந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லவே, பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் அந்த ஆசிரியரை அடித்து, உதைத்து காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் பிரவின் கூறுகையில், ''சேலம் 3 ரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பிரவின்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளிடம் சதீஷ் என்ற ஆசிரியர் தவறான முறையில் சில்மிஷம் செய்திருக்கிறார். அதில், சில குழந்தைகளின் பெற்றோர்கள் எங்கள் அமைப்பில் இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளைப் பாலர் சங்கத்தில் சேர்த்து இருக்கிறார்கள். பாலர் சங்கத்தின் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். முதலில் அந்த ஆசிரியர் தவறாகத் தொடும்போது குழந்தைகளே எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அதையும் மீறி தவறாக நடந்துகொண்டதால் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறார்கள்.

அதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களும் நாங்களும் பள்ளி நிர்வாகத்திடம் சொன்னோம். அதற்கு அப்பள்ளியின் முதல்வர் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வேறு ஒரு வகுப்பில் மாற்றிவிடுவதாகச் சொன்னார். அதையடுத்து நாங்கள் வகுப்பறைக்குச் சென்று அனைத்துக் குழந்தைகளிடமும் விசாரிக்கும்போது, அந்த ஆசிரியர் நிறைய குழந்தைகளிடம் தவறாக நடந்திருப்பது தெரிய வந்தது.  

மீண்டும் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தோம். அந்த ஆசிரியரை பள்ளியைவிட்டு நீக்கிவிடுவதாகக் கூறினார்கள். ஆனால், எங்க கூட வந்த பெற்றோர்கள், `வேறு பள்ளிக்குச் சென்றாலும் இதே தவறை அவர் செய்வார்’ என்று கூறி அந்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறோம்'' என்றார்.