``தேசிய அளவில் தரமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை!" - கரூர் அரசு மருத்துவக் கல்லூரியை சிலாகிக்கும் தம்பிதுரை | Karur MP Thambidurai inspects Medical college hospital construction works

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (01/09/2018)

கடைசி தொடர்பு:23:30 (01/09/2018)

``தேசிய அளவில் தரமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை!" - கரூர் அரசு மருத்துவக் கல்லூரியை சிலாகிக்கும் தம்பிதுரை

தம்பிதுரை ஆய்வு   

கரூர் காந்திகிராமம் அருகில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகளை மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "கரூர் மாவட்ட மக்களுக்குக் கிடைக்கப் பெற்ற தமிழக அரசின் திட்டங்களுள் மிக முக்கியமான திட்டமும், அனைத்துத் தரப்பு மக்களின் வரவேற்பைப் பெற்ற திட்டமுமாக அனைவராலும் பேசப்படுவது காந்தி கிராமத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.269.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் திட்டமாகும். கரூரில் 800 படுக்கைகள் கொண்ட 150 மாணவ, மாணவிகள் பயிலக்கூடிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காகக் கடந்த 1.3.2018 அன்று பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து நடைபெற்று வருகிறது. ரூ.75.79 கோடி மதிப்பில் 3.20 லட்சம் சதுர அடி பரப்பில் வகுப்பறைக் கட்டடங்களும், ரூ.122.79 கோடி மதிப்பில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பில் மருத்துவமனைக் கட்டடங்களும், ரூ.71.01 கோடி மதிப்பில் 2.99 லட்சம் சதுரஅடி
பரப்பில் மாணவ, மாணவியர்கள் தங்கும் விடுதிகளும் என ரூ.269.59 கோடி மதிப்பில் 11.78 லட்சம் சதுரஅடி பரப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரி நகரின் மையப்பகுதியான காந்திகிராமத்தில் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 31.3.2019-க்குள் முடித்திட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டிமுடிக்க
திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த மருத்துவக் கல்லூரி நகரின் மையப்பகுதியான காந்திகிராமத்தில் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் பூங்கா, சுற்றுசுவர், சாலை, வாகனங்கள் நிறுத்துமிடம் என இந்தியாவில் தரமான மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாகத் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு இணையான வசதியுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் ,செவிலியர் கல்லூரி இந்த மருத்துவக் கல்லூரிக்கு அருகில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அமையப்பெறுவதின் மூலம் அங்கு பயிலும் செவிலியர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி அளிக்க ஏதுவாகவும், மருத்துவக் கல்லூரியிலும் அதிக அளவிலான செவிலியர்களைப் பயன்படுத்த ஏதுவாகவும் அமையும். கட்டுமானப்பணிகள் முடிவுற்றால் கரூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி கரூரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் அமையும். பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மருத்துவமனையும் கல்லூரியும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.