`மன்னர் துரைசிங்கம் கல்லூரிக்கு கவிஞர் மீரா பெயர் சூட்டவேண்டும்' - தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை!

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியின் உயராய்வு மையத்துக்கு மீரா பெயர் சூட்ட வேண்டும் என தமிழாசிரியர் இளங்கோ அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மீரா

கவிஞர் மீராவுடைய நினைவுநாளையொட்டி, தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சிவகங்கையில்  நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கவிஞர் மீராவுக்கு மணி மண்டம் கட்டுவோம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையடுத்து கவிஞர் மீரா குறித்து தமிழாசிரியர் இளங்கோவிடம் பேசுகையில், “புதுக்கவிஞர்கள், எழுத்தாளர்களின் சாலைகள் அனைத்தும் சிவகங்கையை நோக்கியே சென்றது. இளைஞர்களை அவர் ஊக்கம், உற்சாகப்படுத்தியதே அதற்குக் காரணம். பிறர் படைப்புகளை வெளியிடுவதில் காட்டும், அக்கறையில் அவருடைய எழுத்துகளை விழுங்கிக்கொண்டவர்.

இன்று எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்கள் இருந்தாலும் இளைஞர்களை இலக்கிய வட்டத்துக்குள் கொண்டு வந்தவர் கவிஞர் மீரா. தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களைத் தேடிபிடித்து அவர்களின் கவிதை கட்டுரைகளை வாங்கி வந்து வெளியிடுவதற்காகவும் அச்சிடுவதற்காகவும் `அன்னம்’ பப்ளிகேசன், `அகரம்’ அச்சகம் நடத்தினார். இளம் கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும், கவிஞர் மீரா பல்கலைக்கழகமாகவும், ஒளிச்சுடராகவும் விளங்கியவர் என்றால் யாராலும் மறுக்க முடியாது. மீரா இல்லையெனில் தமிழகத்தில் நவீன கவிஞர்கள் இருந்திருக்க முடியாது என்றே சொல்லலாம். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் குரு. மகாகவி பாரதி தெய்வம். இவர்கள் இருவர் மூலமாக எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் எந்தத் தடையுமின்றி வாழ்ந்தவர்தான் மீரா.

தொடக்கத்தில் மரபுக் கவிதைகளை மட்டுமே எழுதி வந்தவர். `என் கனவுகளைப் படித்து என்னைப்போல் எழுதும் புதுக்கவிஞர்களே! இதோ... உங்களுக்காக மீராவின் கவிதைகள்’ இதிலுள்ள காதல் கவிதைகளோடு நின்று விடாதீர்கள். சமூகம் சார்ந்த சிந்தனை வளர்த்துக்கொள்ளுங்கள். தமிழினம் வீழ்ச்சியுற்றுக் கிடப்பதில் எனக்கு சம்மதமில்லை. எழுந்து நில்லுங்கள்; எழுச்சிக் கொள்ளுங்கள்; புரட்சிக் கொள்ளுங்கள்! என்று இளம் கவிஞர்களை தட்டி எழுப்பியவர். மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியின் உயராய்வு மையத்துக்கு மீரா பெயர் சூட்ட வேண்டும். சத்தமின்றி சாதனை படைத்ததற்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும். அதே நேரத்தில் அந்தக் கல்லூரி வழியாக செல்லும் சாலைக்கு மீரா பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது சிவகங்கை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்துள்ளது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!