"பல நோய்களை போக்கும் கற்றாழைக் குழம்பு!" - நம்மாழ்வார் சிஷ்யையின் 'அடடே' விழிப்புணர்வு!

"கற்றாழை அவ்வளவு மருத்துவக் குணங்களை கொண்ட மகத்துச செடி. ஆனால், அதை பச்சையாக உண்டால் கசப்பதால்,பலர் சாப்பிட தயங்குவார்கள். அந்த மாதிரியானவர்கள் கற்றாழையை விரும்பி சாப்பிடுறதுக்கு ஏதுவாக கற்றாழை குழம்பை வைத்து உண்ண கொடுக்கலாம்" என்கிறார் சரோஜா குமார்.

கற்றாழைக் குழம்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள லிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா குமார். நம்மாழ்வாரின் முதன்மை சிஷ்யைகளில் ஒருவரான இவர், உணவே மருந்து என்று மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில்தான், 'கற்றாழையை மக்கள் எளிதில் உட்கொள்ள வசதியாக அதை குழம்பாக வைத்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்' என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.அவரிடமே பேசினோம், "நம்மாழ்வார் அய்யா நிரந்தரமாக உறங்கும் கரூர் வானகத்தில், இயற்கை விவசாயப் பயிற்சியின் போது, அங்கப்பன் என்பவர் இந்த கற்றாழை குழம்பை செய்தார். சுவை அருமையாக இருந்தது. அப்போது நம்மாழ்வார் ஐயாவின், அருகே அமர்ந்து உணவு, அரசியல், பற்றி பேசிக் கொண்டு உணவு அருந்தியது இன்றுதான் போல அவ்வளவு பசுமையாக மனதில் இருக்கிறது.

அன்றிலிருந்து அடிக்கடி இந்த கற்றாழை குழம்பை வீட்டில் செய்ய ஆரம்பித்தேன். இம்முறை ஆந்திரப் பிரதேசம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், பயணம் மேற்கொண்டபோது ஒரு முறை இதை செய்து கொடுத்தேன். அனைவரும் பாராட்டினர். மீன் குழம்பு அல்லது வேறு எந்தக் காரக் குழம்பும், செய்வது போலவே. மசாலா அரைத்து,கூட்டி வைக்கவும். வீட்டில் வேறு புளிக் குழம்பு செய்திருப்பீர்கள். கத்தரிக்காய், பாகல், கருணைக்கிழங்கு, மீன் குழம்பு, வத்தக்குழம்பு போன்றவற்றின் செய்முறையே இதற்கும். இந்த குழம்பில் கசப்பு அல்லது கற்றாழையின் விரும்பத்தகாத நெடி எதுவுமே இருக்காது.

குழந்தைகள் கூட விரும்பி உண்பர்.கற்றாழை உண்பதால் நீடித்த மலச்சிக்கல் நீங்கும். வாயுத்தொல்லை நீங்கும். வயிற்றுச்சூடு தணியும். தீராத வயிற்றுப் புண் ஆறும். அதோடு,கற்றாழையை சாப்பிடுவதால் விட்டமின்கள்,தாதுக்கள்,அமினோ அமிலங்கள் கிடைக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். கற்றாழையை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும். இந்த பிரச்னைகள் உள்ளவர்கள் வீடுகள் ஓரம் முளைத்துக் கிடக்கும் இந்த கற்றாழையை பயன்படுத்தாமல்,மருத்துவமனைகளுக்கு ஓடுகிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு வர,நான் பங்குபெறும் அனைத்து நிகழ்விலும் இந்த கற்றாழை குழம்பு பற்றியும்,செய்முறை பற்றியும் விளக்கி கூறுகிறேன்" என்றார்.

 

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!