`'புயலுக்கே பயம் காட்டியவன் நான்'' - சீறும் ஓபிஎஸ்!

``வர்தா புயலில் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தேன்.அதன் பிறகு எந்த புயலும் தமிழகத்திற்கு வர பயப்படுகிறது" என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்

அ.தி.மு.க சார்பில் மன்னார்குடியில் காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்தற்காக தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் பொதுகூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ``தமிழகத்தின்  ஜீவாதார பிரச்னையான காவிரி பிரச்சனையில், சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. அதே போல், தென் மாவட்டத்தின் ஜீவாதாரமான, முல்லை பெரியாறு பிரச்சனையில் வெற்றி கண்டார்.தி.மு.க ஆட்சியில் இதற்காக எதையும் செய்ய வில்லை. ஆனால் ஸ்டாலின், நம்மை சொல்கிறார் முதுகெலும்பு இல்லாதாவர் என்று. 2016 தேர்தலில் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என ஆசைபட்டு, நடையாக நடந்து பல வேஷங்களை போட்டதோடு, டீ கடையில் டீ குடித்தார். நான் டீ கடை நடத்தியவன், என்னிடம் அவர் ஜம்பம் பலிக்கவில்லை.அதே போல், அம்மாவின் மறைவிற்கு பிறகு முதல்வர் ஆக, முயற்ச்சி செய்தார் முடியவில்லை. எத்தனையோ வழக்குகள், பிரச்னை என அனைத்தையும் தாண்டி ஒன்றரை கோடி தொண்டர்களோடு, எஃகு கோட்டையாக  கட்சியையும்,ஆட்சியையும் நம்மிடம் விட்டு சென்றுள்ளார் ஜெயலலிதா.இங்கு நடந்த கூட்டத்தில் தினகரன் என்னை துரோகி என்றும் அவர் தான் என்னை உருவாக்கினார் என்றும் பேசியிருக்கிறார்.

நான் பல பதவிகளை வகித்த பிறகே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தினகரனுக்கு  வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா.அப்போது தினகரன் அரசியலில், எல்.கே.ஜி தான். அம்மா  இருக்கும் போதே முதலமைச்சராக முயற்சி செய்தவர் தினகரன்.அம்மாவுடன் தினகரனையும் சேர்த்து, 18 வழக்குகள் போடபட்டிருந்தது. அந்த வழக்குகளில் தினகரன் தன்னை மட்டும் பிரித்து விடுதலையாகி கொண்டார். இது எவ்வளவு பெரிய துரோகம். இதனால்தான் ஜெயலலிதா, நான் உயிருடன் இருக்கும் வரை தினகரனை போயஸ்கார்டன் இல்லத்திற்குள் விடமாட்டேன் என கூறியதோடு அப்படியே வைத்திருந்தார்.இதே போல் இப்போது கட்சியை கைபற்றுவேன், ஆட்சியை கைபற்றுவேன் என ஜெயலலிதா அரசிற்கு துரோகம் செய்ய நினைக்கிறார். தேர்தல் வந்தால் 200 தொகுதிகள் ஜெயிப்போம் என தமாஷ் செய்கிறார். பதவிக்காக மாமா, தம்பி என அனைவருடன் சண்டை போடுகிறார்.அம்மா மறைவிற்கு பிறகு என்னை முதலமைச்சராக பொறுப்பேற்க சொன்னார் திவாகரன். நான் வேண்டாம் என மறுத்து விட்டேன்.

பின்னர் மூன்று மாதம் மட்டும் முதல்வராக இருப்பேன் என கூறி பொறுப்பேற்று கொண்டேன். ஆட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது  வந்த வர்தா புயலில் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தேன்.அதன் பிறகு எந்த புயலும் தமிழக்த்திற்கு வர பயப்படுகிறது. இதே போல் ஜல்லிகட்டு போராட்டத்தின் போதும் செயல்பட்டு, நல்ல பேர் எடுத்தேன் அது தான் எனக்கு வினையாக வந்தது. திவாகரன் ஊரில் இல்லாத நேரத்தில் என்னை மிரட்டி முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வைத்தனர். அப்போது நான் நடத்திய தர்மயுத்தத்தில் அனைவரும் கைகோர்த்து செயல்பட்டோம்.இப்போது ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் நாம் சேரகூடாது என நினைத்தவர் தினகரன். இப்போது முதல்வர் ஆவதற்காக கோயில் கோயிலாக செல்லும் தினகரன் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஏன் செல்லவில்லை. தினகரனின் பகல் கனவு பலிக்காது.90 சதவீத தொண்டர்கள் அ.தி.மு.கவில் தான் இருக்கிறார்கள்.கட்சியையும் ஆட்சியையும் ஜெயலலிதாவின் ஆன்மா காப்பாற்றும்''என பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!