வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (02/09/2018)

கடைசி தொடர்பு:10:13 (02/09/2018)

அந்த சரக்கொன்றை மலர் உதிர்ந்துவிட்டது... தமிழரசி எனும் தன்னம்பிக்கை மனுஷி

தமிழரசி

ந்த சரக்கொன்றை மலர் உதிர்ந்துவிட்டது... 

“நண்பா, புற்றுநோய் பற்றி நான் நிறைய கேள்விபட்டிருக்கேன். அது பெரிய நரக வேதனைனு எனக்கு நல்லாவே தெரியும். சீக்கிரமே நானும் செத்துடுவேன்னு நினைச்சேன். ஆனா, டாக்டர்ஸ் எல்லோரும் கால்ல ஆபரேஷன் பண்ணினா சரியாகிடும்னு சொன்னாங்க. அரைகுறை நம்பிக்கையோடதான் ஒத்துக்கிட்டேன். ஆபரேஷன் முடிஞ்சதுக்குப் பிறகுதான் என்னோட வலது காலை எடுத்துருக்காங்கன்னு தெரிஞ்சது. 'உன் காலை விட உயிர்தான் எங்களுக்கு முக்கியம்'னு டாக்டர்ஸ் சொன்னாங்க. கால் போயிடுசேன்னு நினைச்சு நான் வருத்தப்படலை. காலேஜ்ல த்ரோபால் டீம் கேப்டனா இருந்த எனக்குள்ள இயல்பாவே ஒரு தைரியம் இருந்துச்சு. 

கால் போனாலென்ன வேறு ஏதாவதொரு விளையாட்டில் என் திறனை வளர்த்துக்குவேன். என்னால முடியும் பாருங்கன்னு மத்தவங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருக்க முடிவு பண்ணினேன். குண்டு எறிதல், வட்டு எறிதல், ஸ்விம்மிங், ஷெட்டில்னு என்னால முடிஞ்ச அளவுக்கு விளையாட ஆரம்பிச்சிட்டேன். செயற்கைக் காலோடு மாநில அளவிலான போட்டியில் குண்டு எறிதலில் தங்கமும் வட்டு எறிதலில் வெண்கலமும் ஜெயிச்சேன். புற்றுநோயால இருண்ட காலமா இருந்த என் வாழ்க்கைய நானே மீண்டும் வசந்தகாலமா மாத்திக்க ஆரம்பிச்சிட்டேன். இனி அடுத்தது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்ல கவனம் செலுத்தணும், பாரா ஒலிம்பிக்ல கலந்துக்கிறதுக்கான முயற்சியை எடுக்கணும்” 

இப்படியான நம்பிக்கை வார்த்தைகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக  டாக்டர் விகடனில் வெளிவந்த 'காலைப் பறித்த புற்றுநோய் - பதக்கங்களை வெல்ல வைத்த தன்னம்பிக்கை' என்ற தலைப்பிட்ட கட்டுரையில் தமிழரசி பேசியது. 

அந்தக் கட்டுரை வெளிவந்த சமயம் தமிழரசி நம்மைத் தொலைபேசியில் அழைத்து “ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா. இது ரொம்ப பெரிய பூஸ்ட்டப்பா இருக்கு. நீங்க வேணா பாருங்களேன். இந்த எனர்ஜி என்னை நிச்சயமா பாரா ஒலிம்பிக்ல போய் நிறுத்தும்” என்றார். சரியாக இரண்டு மாதங்கள் கூட முழுமையாகக் கடந்திருக்கவில்லை. அதற்குள்ளாக புற்றுநோயின் கொடூரத் தாக்குலுக்கு இரையாகி விட்டார். 

தமிழரசி

நேற்று நள்ளிரவின்போதுதான் அவர் மரணச்செய்தி கிடைத்தது. ஒரே ஒருநாள் மட்டுமே அவரை  சந்தித்திருக்கிறேன். ஆனாலும், அவர் இறுதி அஞ்சலிக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என மனம் துடித்தது. காரணம், தமிழரசியின் கம்பீரக் குரல். அன்று நான் அவரை கோபாலபுரத்திலுள்ள மைதானத்தில்தான் சந்தித்தேன். வலது கால் முழுவதுமாக எடுக்கப்பட்டிருந்த நிலையில் செயற்கைக்காலோடு என் அருகே வந்தார். முதல் அறிமுகமே 'வாங்க  நண்பா' என அவர் அழைத்தது உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது. எவரோடும் எளிதில் பழகும் குணம், காலை இழந்த துக்கத்தை முகத்தில் வெளிப்படுத்தாத தன்னம்பிக்கை, நேஷனல் வரை போய் வெற்றி பெற்று வந்த துணிவு என அவரைக் குறிப்பிட்டுச் சொல்ல ஏராளம் இருந்தன. வாழ்வில் சிறு இழப்பைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் துவண்டு போய்விடும் பலருக்கும் தமிழரசி மிகப்பெரிய பாடம். இருபத்து மூன்று வயதில் பருவம் வந்த பெண்கள் அனைவருக்கும் இயல்பாகவே இருக்கக்கூடிய ஆசைகள் அனைத்தையும் புதைத்துக்கொண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்பதையே ஒரே மூச்சாய் கொண்டிருந்த அந்த இளங்கன்று தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது. 

அன்று என்னோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் மேல் விழுந்த சரக்கொன்றை மலரை ரசித்தபடியே தமிழரசி சொன்னார். “கவலை ஆயிரம் வரும் நண்பா. ஆனா, அதே நேரத்துல நாம சந்தோஷப்படுற மாதிரியான நிகழ்வுகளும் எப்போ வேணா நடக்கும். இப்போ, இந்த மலர் என் கையில் கிடைத்திருப்பது போல”. 

தமிழரசியின் கையில் கிடைத்த சரக்கொன்றை அவரை அழைத்துக்கொண்டு நிலம் நோக்கிச் சென்றுவிட்டது. தமிழரசியின் பாரா ஒலிம்பிக் கனவு நிறைவேறாமல் போனாலும் அவர் இந்தச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் விதை போன்றது. விதை ஒருநாள் விருட்சமாகும். 

நீ நிம்மதியாய் இளைப்பாறு தோழி!