‘நீட் தேர்வை அரசு கைவிட என்ன செய்யவேண்டுமோ அதை செய்வோம்’ - திருமாவளவன் காட்டம் | A library in memory of Anitha, in her village

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (02/09/2018)

கடைசி தொடர்பு:10:40 (02/09/2018)

‘நீட் தேர்வை அரசு கைவிட என்ன செய்யவேண்டுமோ அதை செய்வோம்’ - திருமாவளவன் காட்டம்

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா இறப்பை அங்கீகரிக்கும் வகையில் நீட் தேர்வினை மத்திய அரசு கைவிடவேண்டும். இல்லையேல் கைவிட என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்வோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

                                        திருமாவளவன்

நீட்தேர்வினால் பாதிக்கப்பட்டுக்  உயிரிழந்த மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் அவரின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் குழுமூரில் நடைபெற்றது. முன்னதாக மாணவி அனிதாவின் நினைவாகக் கட்டப்பட்ட நூலகத்தினை திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி திறந்துவைத்தார். இதனையடுத்து அனிதாவின் திருவுருவச்சிலையை வி.சி.க தலைவர் திருமாவளவன், கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய.திருமாவளவன்,  “முதலாமாண்டு நினைவேந்தல் நாளில் அனிதாவின் நினைவாக அவரின் நினைவு நூலகம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருடைய திருவுருவச் சிலையும், அனிதாவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் இன்றைக்குத் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அகில இந்திய அளவில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கை. 

                     

நீட்தேர்வினால் ஒடுக்கப்பட்ட ஏழை எளியக் கிராமப்புற மக்கள் விவசாயக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே மத்திய அரசு நீட் தேர்வை முற்றிலுமாக கைவிட்டு மதிப்பெண் அடிப்படையில் தகுதியை தீர்மானித்து அவர்களுக்கு மருத்துவ கல்வி சேர்க்கைக்கு அனுமதி வழங்க அரசு முன்வர வேண்டும். மீண்டும் அனிதாவைப் போல் பிற மாணவர்கள் மருத்துவப்படிப்பிற்காக உயிரிழக்கும் நிலை உருவாகிவிடக் கூடாது.வாழ வேண்டிய வயதில் இளம் பயிர்கள் அழியும் நிலை, இத்தகைய அரசியல் நிலைப்பாடுகளால் கொள்கைகளால் ஏற்பட்டு இருப்பது வேதனைக்குரியது. எனவே இந்த முதலாம் ஆண்டு நினைவு நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க கூடிய நிகழ்வாக இது ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.

தி.மு.க, காங்கிரஸ், திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இஸ்லாமிய அரசியல் கட்சிகள் என்று அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் பங்கேற்கும் நிகழ்வாக இந்தக் கூட்டம் நடந்தது. அனிதாவின் போராட்டத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நீட் தேர்வை மத்திய அரசு முழுமையாகக் கைவிட வேண்டும். போராட்டம் என்பது ஆரம்ப நிலையில் பின்னடைவை சந்திக்கும்  இறுதியாக வெற்றிபெறும். அனிதாவின் தியாகத்திற்கு உரிய மதிப்பளிக்கக்கூடிய வகையில்  நீட்டைக் கைவிட வேண்டும்.இல்லையேல் கைவிட என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்வோம்”என்று எச்சரித்தார்.