கேரளாவுக்கு கைக்கொடுத்த தேசிய பார்வையற்றோர் இணையம்...!

தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில், கேரள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய பார்வையற்றோர் இணையம்

கேரளாவில் 100 வருடத்தில் இல்லாத அளவு மழை பெய்ததால்  அம்மாநிலமே தண்ணீரில் தத்தளித்தது. வெள்ளம், நிலச்சரிவுகளால்  பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஏராளமானோர் முகாம்களில் தங்கவைப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. குழந்தைகள், பெரியவர்கள், திருநங்கைகள், இளைஞர்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும், கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த பலர், தற்போதும் கேரளாவில் களப்பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில், கேரளாவுக்கு நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, இன்று காலை கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. இவர்கள், அனைவரும் முற்றிலும் பார்வையற்றவர்கள்.

இதுதொடர்பாக பேசிய, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், “கேரளாவில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே, எங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இதையடுத்து, நிவாரணப் பொருள்களை சேரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தோம். தற்போது, ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைச் சாமான்கள், உடைகள், தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்டப் பொருள்களை திருச்சூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ளோம். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குடும்பத்துக்கு 2,000 ரூபாயும் வழங்க உள்ளோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!