``எப்போ வேணா கைது செய்வாங்கன்னு வீட்லயே உட்கார்ந்திருக்கேன்!” - ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி | Document director Divya Bharathi interview

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (02/09/2018)

கடைசி தொடர்பு:14:24 (02/09/2018)

``எப்போ வேணா கைது செய்வாங்கன்னு வீட்லயே உட்கார்ந்திருக்கேன்!” - ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி

ஓகி புயல் குறித்த சரியான அறிவுப்பு இல்லை. புயல் பாதித்த பின்னர் தேடுதல் பணிகள், மீட்புப் பணிகள் சரியாக நடைபெறவில்லை. புயல் பாதிப்புகள் குறித்து மக்களிடம் சரியாகப் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டி மக்களிடம் இருந்தது.

தமிழகத்தின் மிகப்பெரிய பேரழிவு என, கடந்த ஆண்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட ஓகி புயல் பாதிப்பைக் கூறலாம். `இந்தப் புயல் குறித்த சரியான அறிவிப்பு இல்லை. புயல் ஏற்படுத்திய பாதிப்புக்குப் பிறகு தேடுதல் பணிகள், மீட்புப் பணிகள் சரியாக நடைபெறவில்லை. பாதிப்புகள் குறித்து மக்களிடம் சரியாகப் பகிர்ந்துகொள்ளப்படவில்லை’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை, மத்திய/மாநில அரசுகள் மீது கன்னியாகுமரி மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் சொல்லிக்கொண்டிருந்தது. அப்போது அரசு அதையெல்லாம் மறுத்து அரசின் செயல்பாடுகளைப் பற்றி செய்தி சேனல்களில் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தது.

இருவேறு முரண்பட்ட கருத்துநிலை இருந்த இந்த விஷயத்தில், உண்மையை வெளியே கொண்டுவரும் வகையில் சமூகச் செயற்பாட்டாளர், வழக்குரைஞர், `கக்கூஸ்' ஆவணப் பட இயக்குநர்  திவ்யபாரதி `ஒருத்தரும் வரேல’ என்ற ஆவணப்படத்தை யூ டியூபில் வெளியிட்டுள்ளார். 100 நிமிடம் ஓடும் இந்த ஆவணப்படம் பற்றியும், இதை இயக்கிய அனுபவம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்...

`` `கக்கூஸ்' படத்தை பல இடங்களில் திரையிடப்பட்ட பிறகுதான்  யூ டியூபில் வெளியிட்டீர்கள். ஆனால், `ஒருத்தரும் வரேல’ திடீரென யூ டியூபில் வெளியிட்டுவிட்டீர்களே. அதற்கான காரணம் என்ன?”

``போன ஞாயிற்றுக்கிழமையே (26.08.2018) ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூத்தூர் மக்கள் முன்னிலையில இந்தப் படம் திரையிட்டாச்சு. ஆனா, அதை நான் பெரிய அளவுல அறிவிக்கல. மூணு நிமிஷ டிரெய்லரையே பெரிய பிரச்னையாக்கி, தினமும் வீட்டுவாசல்ல யாரோ ஒருத்தர் மூலமா கண்காணிக்கப்படுதுன்னு பெரியப் பெரிய தொந்தரவுகளைச் சந்திச்சுட்டிருக்கேன். அதுமாதிரி முதல் ரிலீஸ்ல எந்தச் சிக்கலும் வரக்கூடாதுனுதான் அறிவிக்காம வெளியிட்டேன். உண்மையைச் சொல்லணும்னா நான் எடுக்கிற எல்லாமே யூ டியூப்-க்கான படங்கள்தான். `கக்கூஸ்' படமும் அப்படித்தான் எடுத்தேன். அந்தப் படம் சப் டைட்டிலுக்குக் கொஞ்சம் டைமை எடுத்துக்கிச்சு. அதனால்தான் பிப்ரவரி மாதம் வெளியில திரையிட்டுட்டு, மார்ச் மாதத்துல யூ டியூப்ல வெளியிட்டேன்.”

ஒருத்தரும் வரேல - வெளியீடு திவ்ய பாரதி

``தூத்தூர் மக்கள் முன்னாடி திரையிட்டபோது, இதை அவங்க எப்படிப் பார்த்தாங்க?''

``ஐயோ... அதை வார்த்தைகளால விவரிக்க முடியாது. சமவெளியில இருக்கும் நமக்குத்தான் அந்நியமா வேற யாரையோ பார்க்கிறதா தோணும். ஆனா, அவங்க அவங்களையே பார்க்கிறாங்க இல்லையா! அதனால அந்த உணர்வே வேற மாதிரி இருந்துச்சு. எந்த இடத்தை நான் பதிவுசெய்தேனோ எந்த மக்களைப் பற்றிப் பேசினேனோ அந்த இடத்துல அந்த மக்கள்கிட்ட அதைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்போது ஏற்படுற இப்படி ஓர் உணர்வைக் கடந்துவரும் வாய்ப்பு என் வாழ்க்கையில் நிச்சயம் நடக்காது. ஏன்னா, வேற மாதிரியா இருக்கு. பாட்டெல்லாம் `மறுபடியும் மறுபடியும் போடுங்க’னு சொல்லிப்போட்டுப் பார்த்தாங்க. திறந்தவெளி அரங்கம் வேறு பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள்னு கூடியிருந்த ஒட்டுமொத்த மக்களும் கடைசி வரைக்கும் அங்க இருந்து அசையவே இல்லை.

மீனவர்கள் `வாழ்நாள் முழுக்க உங்களை மறக்க மாட்டோம். இந்த விஷயம் வெளிய வராமலேயே போயிடுமோனு நினைச்சோம். இதை எங்களோட அரசியல் செயல்பாட்டின் அடுத்த நகர்வுக்கான ஆயுதமா பயன்படுத்துவோம். எங்க மக்களே மறந்துட்டாங்க. அதை மறுபடியும் ஞாபகம்படுத்துறா மாதிரி எப்பவும் அழியாத ஒரு ஆவணமா மாத்திட்டிங்க’னு சொன்னாங்க. ஆனா, பொதுவெளியில இதை எப்படி எடுத்துக்கிறாங்கன்னு இனிதான் தெரியும்.”

`` `கக்கூஸு'க்குப் பின்னாடி இப்படியோர் ஆவணப்படம் எடுக்கணும்கிற எண்ணம் ஏன் வந்தது?''

``போன நவம்பர் மாசம் முழுவதும் `கக்கூஸ்' திரையிடலுக்காக டெல்லி, பீகார் போன்ற வடமாநிலங்கள்ல சுத்திட்டிருந்தப்பதான் இந்தப் புயலோட பாதிப்பு தெரியவந்தது. தமிழ்ச் செய்தி சேனல்களைப் பார்க்க முடியாததால இதோட பாதிப்பு எனக்கு அவ்வளவு தெளிவா புரியலை. ஏன்னா, வடஇந்தியச் செய்தித்தாள்கள், சேனல்கள்ல இதைச் சின்ன அளவிலான செய்தியாத்தான் காட்டினாங்க. கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகள்ல இருக்கும் என் நண்பர்கள் மூலமாத்தான் இந்தப் புயலோட தீவிரம் தெரியவந்தது. ஆனாலும் என்னால உடனே கிளம்பி வர முடியலை. டிசம்பர்லதான் வர முடிஞ்சது. வந்த மறுநாளே அங்க கிளம்பிப் போயிட்டேன். அங்க போனா மக்கள் சொல்ற தகவல்களுக்கும் மீடியாக்கள்ல சொல்லப்படுற தகவல்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்துச்சு. ஆவணப்படம் எடுக்கணும்கிற எண்ணத்துல இல்லாம பொதுவா நடக்கிறதைப் பதிவுசெய்யலாம்னு ஆரம்பிச்சு, எல்லாத்தையும் வீடியோவா பதிவுசெய்ய ஆரம்பிச்சேன். அப்படிப் பண்ண ஆரம்பிக்கும்போது நிறைய விஷயங்கள் கிடைச்சது. அப்போ இதை விரிவா பதிவுசெய்யலாம்னு முடிவுசெஞ்சேன். அப்படிப் பதிவுசெய்யும்போது, ஓகி புயல் பாதிப்பை மட்டும் பதிவுசெய்யாம கடற்கரை அரசியலையும் சேர்த்துப் பதிவுசெய்யலாம்கிற நோக்கத்துல நிறைய ஆய்வு செஞ்சு இந்த ஆவணப்படத்தை வெளிக்கொண்டுவந்தேன். இந்தப் படம் வெறும் அழுகையை மட்டும் பதிவுபண்ணியிருக்காது. கடற்கரை அரசியலையும் பதிவுசெய்திருக்கும். அதை, படம் பார்க்கும்போது நீங்க தெரிஞ்சுக்கலாம்.”

ஒருத்தரும் வரேல - திவ்ய பாரதி

``இந்த ஆவணப்படம் எடுக்கும்போது அங்கே இருந்த சூழல் எப்படியிருந்தது?''

`` `கக்கூஸ்' படம் ஒரு பொண்ணோட கதறலைக் கேட்டு ஆரம்பிச்சேன். ஆனா, இந்தப் படத்துல  எட்டு கிராம மக்களின் கதறலைப் பதிவுபண்ணியிருக்கேன். அங்கே இருக்கிற எட்டு கிராமங்கள்ல எல்லா குடும்பத்துலயும் சாவு நிகழ்ந்திருக்கு. அப்படி அப்பாவை, கணவனை, சகோதரனை இழந்த எல்லாரும் என் வயசுப் பெண்கள்னும்போது அது இன்னும் என்னை அதிகமாகவே பாதிச்சது. கிட்டத்தட்ட மனநோயாளியாவே மாறிட்டேனுதான் சொல்லணும்.”

``இந்திய அளவுல கருத்துநிலை சார்ந்த பலர் கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், இந்த ஆவணப்படம் வெளியிட்டிருக்கீங்க. என்ன மாதிரியான பின்விளைவுகளை இது ஏற்படுத்தும்னு நினைக்கிறீங்க?''

 

 

``மத்திய அரசாங்கத்தின் பயத்தைத்தான் காட்டுது. இன்னும் ஒரு வருஷத்துல தேர்தல் வரப்போகுதுனும்போது மக்களுக்கு ஆதரவா குரல் எழுப்பும் எல்லோருடைய குரல்வளையையும் நெருக்கலாம்னு பார்க்கிறாங்க; நசுக்கணும்னு பார்க்கிறாங்க. இப்படிச் செயல்படுறவங்களைத் தாக்கிட்டா, அடுத்து இப்படிச் செய்யணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு உளவியல்ரீதியான மறைமுக அச்சுறுத்தலா அமைஞ்சுடுதுல. அப்படிச் செய்ய நினைக்கிற யாரும் அப்படிச் செய்ய முன்வர மாட்டாங்கள்ல. ஆனா, இதெல்லாம் இன்னும் இந்த அரசுக்கு எதிரா செயல்படுறவங்களை கூர்மையாக்கும்னுதான் நான் நினைக்கிறேன். அப்படித்தான் நடந்துட்டும் இருக்கு. முன்ன சொன்ன மாதிரி மூணே மூணு நிமிஷ டிரெய்லருக்கே நான் கைதுசெய்யப்பட்டேன். இப்போ இந்த 100 நிமிஷப் படம் வெளியாயிருக்குன்னா, எப்போ வேணா கைதுசெய்ய போலீஸ் வருவாங்கன்னு தெரிஞ்சுதான் நான் வீட்லயே உட்கார்ந்திருக்கேன்.” 

திரையிடலில் கலந்துகொண்ட மக்கள் - திவ்ய பாரதி

``அடுத்து என்ன செய்ய திட்டமிட்டிருக்கீங்க?''

``அடுத்து நான் வக்கீல் வேலையைப் பார்க்கலாம்னு இருக்கேன். நாலு வருஷம் போராடி எனக்கு தோழர்கள் எல்லாம் எனக்கு வக்கீல் பதிவ மீட்டுக் கொடுத்திருக்காங்க. பணம் பண்ணணும்னு இல்லை. அதுலயும் மக்களுக்கான வேலைகளைத்தான் பார்க்கணும். தேவையான நேரத்துல கேமராவையும் தூக்குவேன்.”


டிரெண்டிங் @ விகடன்