வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (02/09/2018)

கடைசி தொடர்பு:12:41 (02/09/2018)

தருமபுரியில் தொடரும் சொகுசுப் பேருந்துகள் மீதான தாக்குதல்! - காரணம் தெரியாமல் விழிபிதுங்கும் காவல்துறை

சென்னையில் இருந்து பெங்களூரு, சேலம், கோவை, கேரளா வந்து செல்லும் 4 சொகுசு பேருந்துகள் மீது  நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவங்கள் சேலம் தருமபுரி மாவட்டங்களில் அதிர்ச்சியையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தருமபுரி டூ சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 4 சொகுசு பேருந்துகள் மீது கற்கள் வீசித் தாக்கப்பட்டுள்ளதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதலுக்கான காரணத்தையும், தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை இன்று வரை கைது செய்யவில்லை தருமபுரி காவல்துறை. 

நச்கல் சதி திட்டமா பேருந்து மீது தாக்குதல்

முதல் சம்பவம் - தருமபுரி அடுத்துள்ள குண்டல்பட்டி என்ற இடத்தில் கே.பி.என் சொகுசு பேருந்து மீது கற்களை வீசித் தாக்குதல் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்துள்ளது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது சம்பவம் - காரிமங்கலம் அடுத்துள்ள அடிலம் என்ற இடத்தில் எஸ்.ஆர்.எஸ் சொகுசு பேருந்து மீது கற்கள் வீசித் தாக்கப்பட்டதில் ஓட்டுநரின் மண்டை உடைந்து ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதிலும் ஓட்டுநர் சாமர்த்தியத்தால் பேருந்து விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது சம்பவம் - தருமபுரி டோல்கேட் அடுத்துள்ள பாளையம்புதூர் என்ற இடத்தில் கன்னட சொகுசுப் பேருந்து மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தியதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளனர். இதிலும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

நான்காவது சம்பவம் - தொப்பூர் அடுத்துள்ள தீவட்டிபட்டியில் கே.எஸ்.ஆர்.டி சொகுசு பேருந்து மீது கற்கள் வீசித் தாக்கப்பட்டதில் காயமின்றி ஓட்டுநர் தப்பினார். இதிலும் விபத்தைத் தவிர்க்கப்பட்டுள்ளது. 

சொகுசு பேருந்துகள் மீது ஒரே மாதிரி கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை ஒரு குற்றவாளியை கூடக் காவல்துறையினர் கைது செய்யவில்லை. தாக்குதலுக்கான காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தாக்குதல் சம்பவத்திற்கு கோட்டையில் இருந்து விளக்கம் கேட்ட பிறகும், உரிய பதில் அளிக்க முடியாமல் தருமபுரி மாவட்டக் காவல்துறை திணறுவதுதான் ஆச்சர்யமாக உள்ளது.  இந்தநிலையில், 8 வழிச்சாலை திட்டத்தால் சேலம், தருமபுரி பகுதி விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால், நக்சல் அமைப்புகள் பெரும் விபத்தை ஏற்படுத்த சதித் திட்டமா? என்ற ரீதியில் தருமபுரி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.