‘அதிகம் ஊழல் நடப்பது அறநிலையத் துறையில்தான்’ - ஹெச்.ராஜா காட்டம்

‘தமிழகத்தில் அதிகம் ஊழல் நடப்பது அறநிலையத் துறையில் மட்டும்தான். அவர்கள் கூறும் எதுவும் உண்மையில்லை’ என ஹெச்.ராஜா விமர்சித்திருக்கிறார். 

ஹெச்.ராஜா

இந்து ஆலய மீட்புக் குழு சார்பாக பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கோயில் சொத்துகளை மீட்கவும் கோயில் சொத்துகளுக்கு முறையான வாடகை வசூலிக்கப்படாததைக் கண்டித்தும்  வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

இந்த போராட்டத்தில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினரும் எம்.பியுமான இல. கணேசன்,  இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர்.  போராட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, ``அரசாங்கம் தந்துள்ள பட்டியலில் 4,78,283 ஏக்கர் கோயில் நிலங்கள் உள்ளது. அதில், நஞ்சை நிலம் 2 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர். புஞ்சை 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர். இவைதவிர, இந்து சமய நிறுவனங்கள் 22,600 மனைக்கட்டுகள், 33,665 குத்தகைதாரர்கள் 1,23,729 உள்ளனர். தமிழகத்தில் அதிகம் ஊழல் நடப்பது அறநிலையத் துறையில் மட்டும்தான். அவர்கள் கூறும் எதுவும் உண்மையில்லை. மலர் மருத்துவமனைக்கு எதிராக 500 ஏக்கர் கோயில் நிலம் உள்ளது. ஆனால், தற்போது அங்கு ஒரு பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. அந்தப் பள்ளி இதுவரை 4 கோடி ரூபாய் வாடகை தரவேண்டியுள்ளது. ஆனால், இதுவரை தரவில்லை.

அறநிலையத்துறைபோல் ஒரு மோசமான துறை தமிழகத்தில் இல்லை. அமைச்சர்கள் இருக்கும் கிரீன் வேல்ஸ் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக 300 ஏக்கர் நிலம் உள்ளது. அறநிலையைத் துறை கமிஷ்னராக இருந்த தனபால், அந்த இடத்தில் ஹோட்டல் கட்டுவதாகக் கூறி தனகென ஒரு இல்லத்தை காண்டிராக்டர் மூலம் கட்டியுள்ளார். இது மிகவும் மோசமான செயல். இவரை விட அதிகம் ஊழல் செய்யும் வேறு அதிகாரி இருக்க முடியாது. 

ஹெச்.ராஜா

இந்தியாவில் இரண்டு மாநிலத்தில் மட்டுமே கோயில்கள் வீணாகிவிட்டது. ஒன்று தமிழ்நாடு, மற்றொன்று ஆந்திரா. இரண்டும் முன்னாள் மெட்ராஸ் பிரெஸிடன்ஸியின் கீழ் இருந்ததுதான். திராவிட இயக்கங்கள் கோயில்களை கொள்ளையடிப்பதற்காகவே தொடங்கப்பட்டது. அறநிலையத் துறையை எங்களிடம் கொடுக்கச் சொல்லி நாங்கள் கேட்கவில்லை. எங்களிடம் தந்தால் அனைத்துக் கோயில்களும் சீரமைக்கப்படும். முன்னதாக, அறநிலையத் துறை உள்ளே வரும் முன் கோயில்கள் அனைத்தும் இயங்கிக்கொண்டிருந்தது. ஆமை புகுந்த வீடு வீணாகும் என்பது போல அறநிலையத் துறை புகுந்த கோயில்களும் வீணாகிவிட்டது.

அர்ச்சகர்களுக்குத் தெரியாமல் சிலை திருட்டு நடந்திருக்குமா எனக் கேட்கிறார்கள், அர்ச்சகர்கள் மூலவரை மட்டுமே கண்காணிக்கிறார்கள். ஏதேனும், ஒரு கோயிலில் மூலவர் சிலை திருடப்பட்டிருகிறாதா?. அவர்களுக்குத் தெரியாமல்தான் சிலை திருட்டு நடந்து கொண்டிருகிறது. நம் கோயில், நம் பெருமை. நம் உரிமை. இதற்காகப் போராடாவிட்டால் நாம் எதற்கு விபூதி, குங்குமம் வைக்கிறோம். கோயில்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை. 5 கோடி இந்து வாக்காளர்களும் வீதிக்கு வந்து போராட வேண்டும் அப்போது தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்” என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!