வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (02/09/2018)

கடைசி தொடர்பு:19:41 (02/09/2018)

களைகள் செழிப்பாக இருப்பது வளமான மண்ணின் அடையாளம்... ஏன் தெரியுமா?

பசுமை விகடன் சார்பாக, ஈரோடு திண்டல் சாலையில் உள்ள பரிமளம் மஹாலில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

களைகள் செழிப்பாக இருப்பது வளமான மண்ணின் அடையாளம்... ஏன் தெரியுமா?

‘‘களைகள். விவசாயிகளுக்குப் பிடிக்காத வார்த்தை. ஆனால், உண்மையில் களைகள் வயலுக்குத் தேவை. களைகள் அனைத்தும் செடி வடிவ உரங்கள். பயிர்களுக்கு மூன்று பேரூட்ட சத்துகள் மற்றும் பதினாறு நுண்ணூட்ட சத்துகள் தேவை. ரசாயன விவசாயத்தில் நுண்ணூட்ட சத்துகள் டப்பாக்களில் கிடைக்கின்றன. ஆனால், இயற்கை விவசாயம் செய்பவர்கள் பயிர்களுக்கு நுண்ணூட்ட சத்துகளை எப்படிக் கொடுப்பது? அந்த வேலைகளைத்தான் களைகள் செய்கின்றன. எனவே களைகள் செழிப்பாக இருந்தால்தான் அது வளமான மண்ணுக்கு அடையாளம்’’

என்கிறார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழத்தின் அங்கக வேளாண்மை துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் சோமசுந்தரம்.

களைகள் பற்றி சோமசுந்தரம் 

 

பசுமை விகடன் சார்பாக, ஈரோடு திண்டல் சாலையில் உள்ள பரிமளம் மஹாலில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இயக்குநர் பாண்டிராஜ் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கருத்தரங்கின் இரண்டாவது நாளான நேற்று சோமசுந்தரம் பேசியவைதான் மேலே இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து பேசியவர், ‘‘ களைகளைத் தேவையற்றதாக நினைக்க வேண்டாம். வயலில் வேண்டாம் எனக் களைகளைத் தூக்கி, வேலியோரமாக வீசுவோம். அந்த இடத்தில் பயிர்கள் நன்றாக வளர்வதைப் பார்க்கலாம். அதற்காகப் பயிர்களுக்கு இடையில் களைகளைத் வளர்க்கச் சொல்லவில்லை. களைகளையே உரமாக்கும் வித்தைகளை விவசாயிகள் கைக்கொள்ள வேண்டும். கொழிஞ்சி மிகவும் சத்தான ஒரு களைச்செடி. நல்ல வளமான நிலங்களைக் கொழிஞ்சி நிலம் எனக் வகைப்படுத்துகிறார்கள். எருக்கைச் செடியில் போரான் சத்து நிறைந்திருக்கிறது. துத்தியில் கால்சியம் எனப்படும் சுண்ணாம்பு சத்து நிறைந்திருக்கின்றன. இதுபோல ஒவ்வொரு களையிலும் ஒரு நுண்ணூட்ட சத்து இருக்கிறது. அவற்றைத் தூக்கி வீசாமல் நிலத்தில் மக்கவைத்து, மண்ணை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். பயிர்களுக்குத் தேவையான அளவு மட்டுமே உரங்களை இடவேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது உரத்திற்கும் பொருந்தும்.

ஒவ்வொரு தோட்டமும் சிறந்த உயிர்ச்சூழல் பண்ணையாக இருக்க வேண்டும். அதற்கு முதல் தேவை உயிர்வேலி. அதிக இலைகளைக் கொடுக்கும் கிளரிசிடியா போன்ற மரங்கள் உயிர்வேலியில் நிச்சயம் இடம்பெற வேண்டும். ஆடு, மாடுகளுக்குத் தீவனம் கொடுக்கும் சவுண்டல், அகத்தி போன்ற மரங்கள் இருக்க வேண்டும். அகத்தி மனிதனுக்குத் தேவையான இரும்புச் சத்துகளை கொடுக்கிறது. அகத் தீயை அகற்ற அகத்தியை உண்ண வேண்டும். இலந்தை, கொடுக்கப்புளி போன்ற பழுமரங்கள் வைப்பதன் மூலமாகப் பறவைகளை வயலுக்குள் ஈர்க்க முடியும். உயிர்வேலி இருந்தாலே உயிர்ச்சூழல் உருவாகத் தொடங்கிவிடும். 

காகத்துக்குச் சோறு வைக்கும் பழக்கத்தை விவசாயிகள் கைக்கொள்ள வேண்டும். நாம் கொடுக்கும் சோற்றுக்கு நன்றிக் கடனாக பல இடங்களில் சுற்றி அலையும் காகம், தரமான விதைகளைத் தனது எச்சம் மூலமாகப் நமது வயலில் தூவி விட்டுப்போகிறது. பறவைகள் விதைக்கும் மரங்கள் தரமானவை. அவற்றைத் விட்டு வையுங்கள். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைப் பறவைகள் பார்த்துக்கொள்ளும். அதையும் தாண்டி பூச்சிகள் இருந்தால், வேப்பெண்ணெய் தெளிப்பதன் மூலமாகப் பயிர்களின் இலைகளைக் கசப்பாக மாற்றி விடுங்கள். பூச்சி பிரச்னையே இருக்காது.  இப்படி, உயிர்ச்சூழல் நிறைந்த பண்ணைகள் ஒவ்வொன்றும் பூலோக சொர்க்கங்கள்’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்