`கண் திருஷ்டியால்தான் முக்கொம்பு அணை உடைந்தது' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆருடம்!

கண் திருஷ்டியால்தான் முக்கொம்பு அணை உடைந்தது என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

ஆர் பி உதயகுமார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் கிராமம், கிரமமாக ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது. அப்போது விருதுநகரில் நடந்த அ.தி.மு.க அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய ராஜேந்திரபாலாஜி, ``எடப்பாடி அவர்களின் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டு வருகின்றனர்" என்றார். பின் பேசிய ஆர்.பி.உதயக்குமார் ``எடப்பாடி ஆட்சியில் ஒரு நிதிநிலை அறிக்கை கூட தாக்கல் செய்ய முடியாது என்றவர்கள் மத்தியில் இரண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதையெல்லாம் செய்ய முடியாது என்றார்களோ அதையெல்லாம் முதல்வர் செய்து வருகிறார். தமிழகத்தில் அனைத்து அணைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிலரின் கண் திருஷ்டியால் தான் முக்கொம்பு அணை உடைந்துள்ளது" எனக் கூறினார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார் ``ஊழல் புகாரில் அடிபடும் அமைச்சர் விஜயபாஸ்கர் அதைச் சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவார்" என்றார். இதேபோல் ``சட்டமன்றத் தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் வந்தால் அதைச் சந்திக்க அ.தி.மு.க தயாராக உள்ளது" என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!