வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (03/09/2018)

கடைசி தொடர்பு:07:55 (03/09/2018)

`உரிமைகள் மறுப்பால் கொதித்தெழுந்த மாற்றுத்திறனாளிகள்' - சமரசத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகள்!

தமிழக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு நேற்று திருப்பூரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

மாநாடு முடிவடைந்த நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களின் ஊருக்குத் திரும்புவதற்காக திருப்பூர் ரயில்நிலையத்துக்குச் சென்றனர். அப்போது அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனி டிக்கெட் கவுண்டர் இல்லாததை அறிந்து ஏமாற்றமடைந்த அவர்கள், பின்னர் பொது வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கச் சென்றனர். அப்போது அங்கு டிக்கெட் வழங்கிக்கொண்டிருந்த ரயில்வே பணியாளரிடம் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கான ரயில்வே சலுகை சான்றிதழைக் காண்பித்து டிக்கெட் கேட்டுள்ளனர். ஆனால், பணியாளர் அவர்களுக்கு சலுகை கட்டணத்தில் டிக்கெட் வழங்க முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். 

இதனால் கவுண்டரில் டிக்கெட் வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள் வந்தால்தான் முற்றுகைப் போராட்டத்தை திரும்பப் பெறுவோம் என மாற்றுத்திறனாளிகள் உறுதிபட தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் சிறிது நேரம் கழித்து ரயில் நிலைய அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளுடன் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து ஊருக்குத் திரும்பவிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சலுகையுடன் கூடிய பயணச்சீட்டு வழங்கப்படும் என ரயில்வே தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்பிறகே மாற்றுத்திறனாளிகள் தங்களின் முற்றுகைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். இந்தச் சம்பவத்தால் திருப்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.